கையடக்கத் தொலைபேசிகள் வெடிக்கும் என்ற வதந்திகள்!
கையடக்கத் தொலைபேசிகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் எனும் பொய்யான வதந்தி அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அவ்வாறான காணொளிச் செய்தியினால் மக்கள் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு அறிவித்துள்ளதாக டெய்லி மிரர் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் பல அழைப்புகள் வந்துள்ளதாக மேற்குறித்த குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனபொல கூறியதாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில், பார்வையாளர்கள் இதனை கவனமாகக் கேட்டு இச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
”13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், எக் காரணத்துக்காகவும் பதிலளிக்க வேண்டாம்.
நீங்கள் அழைப்புக்கு பதிலளிக்கும்போது உங்கள் தொலைபேசி உடனடியாக வெடிக்கும். இவ்வாறான சம்பவங்கள் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் நடைபெற்று பலர் உயிரிழந்துள்ளனர்.
இது இலங்கையையும் பாதிக்குமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், 13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
மேலும் இச் செய்தியை அனைவருடனும் பகிரவும்” என அறிவுறுத்தப்படுகிறது.
தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்பட்சத்தில் கையடக்கத் தொலைபேசிகள் வெடித்த சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் தமுனுபொல தெளிவுபடுத்தினார்.
பின்னணி குரலுடன் தொடர்பில்லாத வகையில், தலையில்லாத மனிதன் இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி காணொளியில் காண்பிக்கப்படுகிறது.
குறித்த எண்களிலிருந்து வரும் அழைப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், காணொளியை சரிபார்க்க விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அழைப்பொன்றினால் கையடக்கத் தொலைபேசி வெடிப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியம் இல்லை எனவும் தமுனுபொல விளக்கமளித்துள்ளார்.
13 அல்லது 4 எண்களில் இருந்து வரும் அழைப்புகளினால் தொலைபேசி வெடிக்கும் எனும் செய்திக்கு எதுவித ஆதாரமும் இல்லை.
மக்கள் தேவையற்ற அச்சத்தை பரப்பி வருகின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறால் தொலைபேசி வெடிக்கலாம் ஆனால், அழைப்புகளினால் தொலைபேசி வெடிக்காது.
எனவே இவ்வாறான தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என இலங்கை கணினி அவசர ஆயத்தக் குழு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.