2025 முதல் இங்கிலாந்தில் ஒற்றைப் பயன்பாட்டு வேப்ஸ் விற்பனைக்கு தடை!
இங்கிலாந்து அடுத்த ஆண்டு முதல் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய வேப்ஸ்களை (மின் சிகரெட் வகை) தடை செய்ய உள்ளது.
சிறுவர்களிடையேயான வேப்ஸ் பாவனை அதிகரிப்பு மற்றும் சுற்றுச் சூழல் கவலைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஜூன் 1 முதல் ஒற்றைப் பயன்பாட்டு வேப்ஸ் விற்பனையைத் தடை செய்வதற்கான புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் அமைச்சர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
ASH என்ற சுகாதார தொண்டு நிறுவனம் 2024 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், இங்கிலந்தில் 11 முதல் 17 வயதுடைய ஐந்து சிறுவர்களில் ஒருவர் வேப்ஸ் பாவனையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இங்கிலாந்தில் ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஒற்றைப் பயன்பாட்டு வேப்ஸ்கள் குப்பையாகவோ அல்லது பொதுக் கழிவுகளில் வீசப்பட்டதாகவோ மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வேப்ஸ் விற்பனையை சட்டவிரோதமாக்குவது, இந்த முக்கியமான பிரச்சினையில் செயல்படுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
இங்கிலாந்தில் வேப்ஸ் பயன்பாடு 2012 மற்றும் 2023 க்கு இடையில் 400% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது, பிரிட்டிஷ் மக்களில் 9.1% பேர் இப்போது இந்த தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.