நூல் விமர்சனம்… கவிதை கிளையில் ‘மரகதப்புறா’… யாழ் எஸ்.ராகவன்
வாசகனின் உணர்வுகளுக்குள் புகுந்து கிளர்ச்சி அடை செய்து புலன் அனுபவங்களை ஈர்த்து புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவது நல்ல சிறுகதைக்கான இலக்கணம் என்பரர் எட்கர் ஆலன்போ.
கவிதை ,மொழிபெயர்ப்பு ,பாடல், ஹைக்கூ சிறுகதை என இலக்கியத்தின் எல்லா நதிகளும் ஒன்று கூடும் கலைக்கடலாய் கவிஞர் தங்கேஸ். ஓய்வின்றி எழுதிக் குவிக்கும் அந்த மனதுக்குள் புதிதாய் பூத்த சிறுகதை தொகுப்பு மரகத புறா.
விளிம்பு நிலை மாந்தர்களும்,.
சமூகத்தின் முரண்களும் ஒரு படைப்பாளியின் கூர் தீட்டப்பட்ட எழுதுகோலில் இருந்து பிரபாகம் எடுத்து கிளம்பும்போது அது மானுடத்தை அசைக்கிறது.
பறவைகளை பூக்களை வானத்தை நிலவை தண்ணீரை இன்னும் இன்னும் விரிந்து கிடக்கும் வானத்தை ஊடே நீந்தும் மேகத்தை பட்டுப்பூச்சி வண்ணத்துப்பூச்சி என்று இயற்கையின் சகல பரிணாமங்களையும் நேசிக்கும் ஒரு மனது தான் சக மனிதனையும் பிரியத்துடன் அனைத்துக் கொள்ளும்.
அந்த சமூக நோக்கும் இரக்கம் கொண்ட பார்வையும் எழுத்தாளருக்கு இயற்கையாகவே வைத்திருப்பது சிறப்பு.
வித்தகன் கைபட்டால் விரகும் வீணையாகும் தகரமும் தங்கமாகும் பதரும் பவுன் ஆகும்
நம்மைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதை எழுத்தில் கொண்டு வருவதற்கு ஆழ்ந்த மொழிப் புலமையும் கோர்த்த சிந்தனை வெளியும் தேவையாகிறது. பல்வேறு விதமான அனுபவமும் சேரும்போது அமரகாவியம் பிறந்து விடுகிறது.
மரகதப்புறா என்ற முதல் கதை தொடங்கி காணாமல் போனவர்கள் என்ற கடைசி கதை வரை விறுவிறுப்பான மொழி நடை கவிதை நடையாகவும் ரசிக்கத்தான் வைக்கிறது.
உணர்வுகளை ச்சுண்டி இழுக்கும் கருத்தோட்டம் கண்முன்னே விரியும்காட்சி படிமம் பல்வேறு விதமான பாத்திரங்களின் மன உணர்வுகள் நம்மை கதையோடு பொருத்திப் பார்க்க வைக்கிறது.
இத்தொகுப்பில் படைக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் வலிகளை சொல்பவர்களாக அறிவில் சிறந்தவர்களாக உடல் உழைப்பு உயர்ந்தவர்களாக என பல்வேறு நிலைகளில் உள்ள பெண்களை படம் பிடித்து காட்டுகிறார்.
இளநீர் கதையில் மூன்று விதமான பெண்களை அவர் காட்டி செல்லும்போது அங்கே கதை தலைவனுக்கு வேலையில்லை ஒரு ஆண் பின்னின்று பெண் பாத்திரங்களை முன்வைத்து படைப்பது அற்புதம்
மரகதப்புறா என்ற கதையே குறியீட்டு கதையாக இருக்கிறது. ஒரு கதை மூன்று விதமான பொருளில் அமையுமா வாசிப்பவருக்கு அவரவர் தன்மைக்கேற்ற வேறு வேறு படிமங்களை கொடுக்குமா என்றெல்லாம் யோசிக்க வைத்த முதல் கதை மிக முக்கியமான கதை.
தொகுப்பில் “தேடாத கிளை இல்லை” என்ற கதை காதல் தோல்வியை இவ்வளவு அழுத்தமாக இத்தனை ரசனையாக கவித்துவமாக சொல்ல முடியுமா என்று யோசிக்க வைக்கிறது. அதற்கு ஆசிரியரின் வாசிப்போம் மொழி நடையும் திறமையும் காரணம் என்று சொல்லத் தூண்டுகிறது.
காணாமல் போனவர்கள் காடை என்ற இரண்டு கதைகள் வருகின்ற அம்மா கதாபாத்திரம் எல்லா அம்மாக்களையும் கண்முன்னே கொண்டு வருவது தவிர்க்க முடியாதது.
பள்ளிக்கூடம் தொடர்பான மூன்று கதைகளில் மாணவர்களின் இன்றைய நிலை ஆசிரியர் சூழலை அரசாங்கத்தின் நிலை என்று எல்லாவற்றையும் அலசி ஆராயுடன் கதைகள் சரியாக அமர்ந்திருக்கின்றன.
திரில்லர் ,அமானுஷ்யம் ,இயற்கை சாதிய சமூக மாறுபாடு பெண் அவலம் ஆகிய சமூக கண்ணோட்டத்துடன் இந்த நூல் படைக்கப்பட்டு இருக்கிறது.
நகைச்சுவை உணர்வு இயற்கையாகவே கவிஞர் தங்கேஸ் அவர்களுக்கு உண்டு என்பதை படைப்பிலும் காண முடிகிறது.
மதச்சார்பின்மையை பறைசாற்றும் மிகப்பெரிய ஆயுதம் பசி என்று எஸ் ராமகிருஷ்ணன் சொல்வார்.
எடுப்பு தொடுப்பு முடிப்பு சரியாக அமைந்து விட்டால் கதை நன்றாக இருக்கும் என்று மகாகவி தாகூர் சொல்வார். எத்தனை விதமான கருத்துக்கள் மேற்கோள்கள் சொன்னாலும் அதையும் தாண்டி நிற்பது படைப்பாளரின் ஜீவ ஊற்று அது இந்த தொகுப்பு முழுவதும் மிகச் சிறப்பாக பரவி வந்துள்ளது.
இன்னும் இன்னும் எண்ணச் சிறகுகளை இதய வானத்தில் சுதந்திரமாக பறக்க பறக்க விட அன்பின் வாழ்த்துக்கள்.
மரகத ப்புறா சிறுகதை
ஆசிரியர் தங்கேஸ்
பாரதி புத்தகாலயம்
சென்னை
பக்கம் 160
விலை 160