5 ஆண்டுகளின் பின் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு; எல்லை ஒப்பந்தம் வரவேற்பு!
ரஷ்யாவின் கசானில் நடைபெற்றும் வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (23) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
இரு நாட்டு தலைவர்வகளும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக சந்தித்த சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்போது, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அண்மைய ஒப்பந்தத்தை வரவேற்ற மோடி, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இரு நாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஜி ஜின்பிங்கிடம் வலியுறுத்தினார்.
இந்தியா-சீனா உறவு நமது மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.
பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டும் என்றும் இந்தியப் பிரதமர் இங்கு கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இறுதியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
2020 ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் இராணுவத்தினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலுக்குப் பின்னர், கசானில் இந்த சந்திப்பு வந்துள்ளதுடன், இருதரப்பு உறவுகள் மீண்டு வருவதற்கான நம்பிக்கையை எழுப்பியிருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை (21) இரு நாடுகளும் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக முக்கிய ரோந்து பணியை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.