அநுரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை!; தேர்தலுக்கு முன் கூறியதற்கு மாறாகவே இப்போது நடப்பதாகவும் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குழுக்களின் அறிக்கை விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியலமைப்பை மீறிவிட்டார் என்றும், இதனால் பாராளுமன்றம் கூடிய பின்னர் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கம்மன்பில இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிடுவதற்காக ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கியிருந்தோம். ஆனால் அவர் அந்தக் காலப்பகுதியில் அந்த அறிக்கையை வெளியிடவில்லை. அந்த அறிக்கையை வெளியிடுமாறு கூறும் போது அவர்கள் என் மீது சேறுகளை வீசுகின்றனர். ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்த போது அப்போதிருந்த ஜனாதிபதியிடம் அந்த அறிக்கைகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நான் அந்த அறிக்கைகளை வெளியிடுவதாக கூறியதால் ஜனாதிபதி கட்டுநாயக்கவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது, என்னை கோமாவில் இருந்து வந்தவர் என்று கூறியுள்ளார். ஆனால் கடந்த 5 வருடங்களாக நான் கோமாவில் இருக்கவில்லை. இதனால்தான் அரசாங்கத்துடன் மோதி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம். ஆனால் தற்போதைய ஜனாதிபதிதான் கோமாவில் இருந்து வந்துள்ளதாக நினைக்கின்றேன்.
உகண்டாவில் இருந்து பணத்தை கொண்டு வருதல், 150 ரூபாவுக்கு பெட்ரோல் வழங்குதல், எம்.பிக்களின் சலுகைகளை இல்லாது செய்தல், சம்பள அதிகரிப்பு, ஐஎம்எப் ஒப்பந்தத்தை திருத்துதல் உள்ளிட்ட எதுவும் ஜனாதிபதிக்கு தற்போது நினைவில் இல்லை. இதனால் கோமா நிலையில் இருந்து அவர் எழுந்து வர வேண்டும்.
இதேவேளை எனது குலத்தை பாதுகாப்பதற்காக நான் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனது தந்தை சிறந்த பௌத்தன் என்பதனால் எனக்கு குலத்தை பாதுகாக்க வேண்டிய தேவையில்லை.எனக்கு பாதுகாக்க எந்த குலமும் இல்லை. நான் குருநாகல் வைத்தியசாலைக்கு சென்று கருப்பப் பை தொடர்பில் கதைத்ததாகவும் கூறியுள்ளார். அப்படி கதைத்திருந்தால் அதனை நிருபிக்குமாறு கூறுகின்றேன்.
இது விசாரணைக்குழுவின் அறிக்கை இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் அந்த அறிக்கையிலேயே இது விசாரணை அறிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி தனது மொழிப் பெயர்ப்பாளரை பதவி நீக்க வேண்டும்.
நான் குழுவொன்றின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். ஆனால் நான் மக்களின் ஒப்பந்தத்தையே செய்கின்றேன். எனக்கு அமெரிக்கா, சீனா, இந்திய தூதரகங்களின் ஒப்பந்தக்காரர் என்று கூறவில்லை. ஜனாதிபதி நீங்கள் நல்ல ஆலோசகரை நியமியுங்கள் என்று கூறுகின்றேன்.
எவ்வாறாயினும் நான் அறிக்கையை வெளியிடுகின்றேன். ஆனால் என்னை இப்போதைக்கு கைது செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே எது நடந்தாலும் நடக்கும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிட தயங்குகின்றார். தேர்தலில் தனக்கு ஆதரவளித்தவர்களை பாதுகாக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? ஜனாதிபதியானதும் தனக்குள்ள,அரசியலமைப்பு ரீதியலான அதிகாரத்துக்கமை குறித்த குழுக்களின் அறிக்கைகளை வெளியிட்டிருக்க வேண்டும். தனக்கு சாதகம் என்றால் அதனை வெளியிடுவதற்கும், பாதிப்பு என்றால் அதனை மூடி மறைப்பதற்கும் முடியுமா? அரசியலமைப்பை மீறியமைக்காக ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இவரின் செயற்பாடுகள் அரசியலமைப்பின் 38ஆம் சரத்துக்கு அமைய குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கான காரணமாகும். இதனால் ஜனாதிபதி ரவி செனவிரட்னவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அரசியலமைப்பை மீறியமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்றம் கூடிய பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எனக்கு பாராளுமன்றம் போக முடியாத நிலைமை ஏற்பட்டால் எமது அணியை சேர்ந்தவர்கள் அந்த பணியை முன்னெடுப்பார்கள் என்றார்.