“உளவு நிறுவனங்கள்” …. தொடர் 43…. மௌனஅவதானி.
உளவு நிறுவனங்களின் வலைப்பின்னல் உலகநாடுகள் எங்கும் படிப்படியாக வியாபித்திருப்பதை மறுக்க முடியாது.குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எங்கினும் பலம்பொருந்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் மக்களோடு மக்களாக வியாபித்து நின்று அந்தந்த நாடுகளின் கட்டமைப்பு இரகசியங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து வருகின்றன.அதற்கு எதிராக இந்நாடுகள் பெரும் நிதியை ஒதுக்கி உளவு பார்ப்பவர்களை உளவு பார்க்க வேண்டிய பாரிய வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து உளவு நிறுவனங்கள் இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தவிடுகின்றன.இந்திய உளவு நிறுவனமான றோ இலங்கையில் மட்டுமே நிலை கொண்டிருக்கின்றது என்று நம்புவோமானால் அது முற்றிலும் தவறு.
இந்தியத் தூதரகங்கள் எந்தெந்த நாடுகளில் இருக்கின்றனவோ அந்தந்த நாடுகளில் தூததரகங்களில் ஒரு பகுதியாக இந்திய உளவு நிறுவனம் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.உலக நாடுகளின் உளவு நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களின் ஒரு பகுதியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இன்னும் குறிப்பாக இந்திய தூதரகங்கள் இல்லாத நாடுகளில் அதிலும் குறிப்பாக மக்கள் வாழ்கின்ற சிறு சிறு தீவுகளில்கூட இந்திய உளவு நிறுவனம்,அங்குள்ள தொழிற்சாலைகள்,வணிக நிறுவனங்கள் ஊடாக இயங்குகின்றன.
தொழிற்சாலைகளினதும் அல்லது வணிக நிறுவனங்களினதும் அதிகாரிகள் அவை சார்ந்த அதிகாரிகளாக பொதுவாகத் தோற்றப்படினும்,அவர்கள் உளவு நிறுவன ஒற்றர்களாகவும் பணி செய்கிறார்கள்.
இது இந்திய உளவு நிறுவனத்திற்கான உதாரணம் மட்டுமல்ல, பலம்பொருந்திய நாடுகளின் அனைத்து உளவு நிறுவனங்களும் இவ்வழியிலும் செயல்படுகின்றன என்பதற்காகவே.
சில நாடுகளில் அபரிதமான கனிம வளங்கள் மண்ணுக்கு கீழ் இருக்கின்றன.இவை புதிய புதிய கருவிகளின் உற்பத்திக்கு அதிமுக்கிய தேவையாக இருக்கும் பட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுள்ள கருவிகளைக் கொண்டுள்ள இத்தகு நாடுகள் பொருளாதாரக் கட்டமைப்பைச் சரிவரக் கையாளத் தெரியாமையால் தத்தளித்து வறுமை நிலைக்குட்படுகையில் அந்நாடுகளில் உள்ள கனிம வளங்களை எடுப்பதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்பதற்கமைய உதவி செய்யும் நாடுகளே இத்தொழிநுட்பவியாளர்களுடன் உளவு பார்க்கும் ஒற்றர்களையும் பணியமர்த்துகின்றது.
இவர்கள் தொழில்நுட்ப துறைசார் அறிவியலாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இருந்தாலும்கூட தனது நாட்டுக்கு ஒற்றர்களாக வேலை பார்ப்பதில் அவர்கள,; தமது நாடு உலக நாடுகளின் வரிசையில் முன்னணியில் நிற்க வேண்டுமென்பதற்காக தகவல் சேகரிக்கும் ஒற்றர்களாக பணிபுரிவார்கள்.
கனிம வளங்களை எடுப்பதன் மூலம் அவற்றால் அந்நாடு பொருளாதாரத்தில் முன்னேறுகிறது என்று ஒருவழி தென்பட்டாலும் அக்கனிம வளங்கள் சூறையாடப்படுவதற்கு வணிகம் என்ற பெயரிடப்படுகின்றது என்பதும் உண்மையே.கனிமவளத் தொழிற்சாலைகளில் துறைசார் தொழில்நுட்பவியலாளரர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் அதே வேளை ஒற்றர்களாகவும் வேலை செய்வோர் அரிதான மிகப் பெறுமதியான கனிம வளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நாடுகள் முன்னேறிவிடக்கூடாதென்பதிலும் தொடர்ந்தும் அவை வறிய நாடாகவே இருந்து வரவேண்டுமென்பதிலும் தீவிர அக்கறையுடன் இருப்பார்கள்.
தத்தமது நாடு முன்னணியில் இருக்க வேண்டுமென்பதற்கு இத்தகு இரட்டைப் பணி பெரும் பங்கையாற்றி வருகின்றது.
நாடுகள் தமக்குள் ஒன்றுக்கொன்று உதவி செய்வது போல உலகநாடுகளின் உளவு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்தும் வருகின்றன.
உதாரணமாக ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் தமது தனிநாட்டுக் கொள்கைக்கு அவர்களிடமிருந்து எத்தகு உதவி கிடைக்கின்றன,அதற்கான அவர்களின் நிர்வாக வலைப்பின்னல் எவ்வாறானது,அனைவருமே கொள்கைக்குச் சார்பானவர்களா, அவர்களில் அக்கோரிக்கையை ஏற்றக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்களா என்பன போன்றவற்றுடன் இக்கொள்கைக்குச் சார்பான ஊடகங்கள் அமைப்புக்கள் போன்றவற்றின் விபரங்களை வழங்குவதற்காக புலம்பெயர் நாடுகளில் இயங்குகின்ற அந்தந்த நாட்டு புலனாய்வப் பிரிவினரை இந்திய உளவு நிறுவனம் அணுகுவதும், அந்தந்த நாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் இந்திய உளவு நிறுவனத்துக்கு இரகசியங்களை வழங்குவதுடன் இலங்கை அரசுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.
இத்தகவல் அளிப்பது என்பது இயல்பானதே.புலம்பெயர் நாடுகளில் பேரணிகள் நடத்தவும், தமிழர் சார்ந்த சனநாயக வழி அமைப்புகளை நடத்துவதற்கும் தமது உரிமைப் பிரச்சினைகளை தமது மக்களுக்குச் சொல்வதற்காக ஊடகங்களை நடத்துவதற்கும் அனுமதி அளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் அதே வேளை ஈழத்தமிழரின் நடவடிக்கைகளை கண்காணித்து அதனை இந்தியா இலங்கை அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அறிவித்துக் கொண்டேயிருக்கும்.இது ஒரு நாட்டின் தனித்துவமான இரகசியமான செயல்பாடாகும்.
இதுமட்டுமல்லாது இந்த நாடுகளில் இயங்குகின்ற குறிப்பாக ரஸ்யாவின் உளவு நிறுவனம், அமெரிக்க உளவு நிறுவனம்,சீன உளவு நிறுவனம், இஸ்ரேல் உளவு நிறுவனம் போன்றவையும் புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர்களின் நடவடிக்கைகள் என்னென்னவென ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டேயிருக்கும்.
அந்தந்த நாடுகளின் காவல்துறையினர் பேரணி காலங்களில் பாதுகாப்பு வழங்கும் போதே செயல்பாட்டாளர்களுடன் இயல்பாக பேசுவது போலப் பேசியும் உங்கள் நடவடிக்கைகள் நியாயமானது சனநாயக முறைக்குட்பட்டது எனச் சொல்வதன் மூலமாகவும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டு ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்ற இரகசியங்களை அறிந்து கொள்வார்கள்.
இவ்வறிந்து கொள்ளலுக்காக தனிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவானவர்களுடனும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுடனும் காவல்துறை உட்பட புலனாய்வுப் பிரிவினர் இயல்பு நிலையிலே நடந்து கொள்வார்கள்.இது உளவு நிறுவனங்களின் அணுகுமுறைகளில் ஒன்று.
தனிநாட்டுக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஈழத்தமிழர்கள் தமக்குள் அணிதிரண்டும் தனித்தும் தனிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவானவர்களிடமிருந்து இரகசியத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக தமது ஒற்றர்களை ஆதரவு அமைப்புக்களில் அங்கத்தவர்களாக இணையச் செய்து தனிநாட்டுக் கொள்கைக்கோ அல்லது அரசியல் நடவடிக்கைக்கோ தீவிரமான ஆதரவாளர்கள் என்பது போல நடித்து அனைத்து இரகசியங்களை பெற்றுக் கொள்வதுடன் அமைப்புகளுக்குள் ஊடுருவிய இத்தகையவர்கள் அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டுமென்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.
இவர்கள் இந்தியாவுக்காகவும் இலங்கைக்காகவும் புலம்பெயர் புலனாய்வுப் பிரிவினருக்காகவும் இயங்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாதவாறு தாம் இனமான உணர்வுள்ளவர்கள் போலவும் விசுவாசிகள் போலவும் நடித்துக் கொள்வார்கள்.
இவ்வாறானவர்கள் எவ்வாறு ஈழத்தமிழரின் அமைப்புகளுக்குள்ளும், ஊடகங்களுக்குள்ளும் ஊடுருவ வேண்டுமென்பதற்கான பயிற்சிகளைப்; பெற்றிருப்பார்கள்.
ஈழத்தமிழரின் அறிக்கைகளைவிட, ஊடகங்கள் மூலமாக விடும் செய்திகளைவிட, ஈழத்தமிழரின் அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் தொலைபேசி வாயிலாகவும் உரையாடல் வாயிலாகவும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்வதை ஈழத்தமிழ் ஒற்றர்கள் கதைகேட்பவர்களாகவும்,தொலைபேசி உரையாடல் வாயிலாகவும் அறிந்து கொள்வார்கள்.
அதே வேளை யார் யார் ஈழத்தமிழர்களின் அமைப்புகளின் பொறுப்பாளணர்கள்,ஊடகங்களின் பொறுப்பாளர்கள்: என்பதை ஈழத்தமிழ் ஒற்றர்களே ஐரோப்பிய நாடுகளின் புலனாய்வுப் பிரிவினருக்குச் சொல்வதன் மூலம் அந்தந்த நாட்டு புலனாய்வு இரகசிய திணைக்களம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதும்,அதனை மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழி பெயர்த்தும் அறிந்து கொள்வார்கள்.
இரகசியத் தகவல்களைக் கொடுக்கும் ஈழத்தமிழ் ஒற்றர்களே மொழிபெயர்ப்பாளர்களாகவும் செயல்படுவதும் உண்டு.
(தொடரும்…)