மகிந்தவின் உயிருடன் விளையாட வேண்டாம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டப்படி தேவைகளுக்கு ஏற்றவாறே வாகனங்கள் ஒதுக்கப்படும். மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்ந்து புலனாய்வு தகவல்கள் மூலமே எந்தளவு வாகனம் வழங்கப்படும் என்பது தீர்மானிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர். விடுதலைப் புலிகளால் முன்னர் பிரேமதாச, லலித் அத்துலத் முதலி போன்றோர் கொல்லப்பட்டதுடன், சந்திரிகா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு அந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இதேவேளை மகிந்த ராஜபக்ஷவே இலங்கையில் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர். இந்த நாட்டை பாதுகாப்பதற்காக தனது உயிரை பணயம் வைத்தவருக்கு எமக்கு பாதுகாப்பை வழங்க முடியாது என்றால் இனி எந்தத் தலைவரும் மகிந்த ராஜபக்ஷவை போன்று இருக்க மாட்டார்கள். அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கையொன்றை விடுகின்றேன். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவின் உயிருடன் மட்டுமல்ல நாட்டின் எதிர்காலத்துடனுமே விளையாடுகின்றீர்கள். நீங்கள் இப்படி செய்தால் இனியொருபோதும் தனது உயிரை பணயம் வைத்து நாட்டை பாதுகாக்கும் தலைவர்கள் உருவாக மாட்டார்கள் என்றார்.