திருடர்கள் வேட்டை ஆரம்பம் உரிய உத்தரவுகள் பறக்கின்றன; பிடிக்கும் போது எவரும் கொக்கரிக்கக் கூடாது
கடந்த காலங்களில் ஊழல் மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முறையாக ஆவணங்களை திரட்டி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கக்கூடியவாறு நீதிமன்றத்தில் வழங்குகளை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இப்போது திருடர்களை பிடிக்கவில்லையா என்று கேட்பவர்கள், நாங்கள் திருடர்களை பிடிக்கும் போது கொக்கரிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தங்காலை நகரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவம்பர் 14ஆம் திகதியே நாட்டில் பெரும் சிரமதானம் நடக்கவுள்ளது. தூய்மையற்ற பாராளுமன்றத்திற்கு பதிலாக தூய்மையான பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டும் என்று மக்களுக்கு நீண்ட கால எதிர்பார்ப்பு இருக்கின்றது. நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் சிறிது நாட்களில் பாராளுமன்றத்தை கலைத்து நவம்பர் 14ஆம் திகதி அதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கியுள்ளோம். மக்களே சுத்தப்படுத்த முன்னர் சிலர் தாங்களாகவே சுத்தப்படுத்திக்கொண்டுள்ளனர். குறிப்பாக அம்பாந்தோட்டை மாட்டத்தில் அந்த நிலை உருவாகியுள்ளது. வேட்பாளர் பட்டியலில் பெயர்கள் இல்லை. அதாவது 60க்கும் அதிகமானோர் தானாகவே விலகியுள்ளனர். நவம்பர் 14ஆம் திகதி இன்னும் பலர் ஒதுக்கப்படுவர்.
இந்நிலையில் சிலருக்கு எங்களை குழப்ப வேண்டிய தேவையுள்ளது. ஆனால் நாங்கள் குழம்பப் போவதில்லை. புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டியுள்ளது. ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். அனைவரின் கருத்துக்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். அதற்கான உரிமையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.
முதலாவதாக பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தி நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளோம். சர்வதேச தரப்பினருடன் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஸ்தீரமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு தேவையானவற்றை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இதேவேளை விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரித்துள்ளோம். ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் டிசம்பர் மாதத்தில் இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவும் பெப்ரவரி மார்ச்சில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தவுள்ளோம். பாடசாலை மாணவர்களுக்கானன கொடுப்பனவுகளை வழங்கவுள்ளோம். வறுமை மற்றும் அங்கவீனர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்கவுள்ளோம். புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் வருடாக 2025ஆம் ஆண்டை மாற்றியமைப்போம்.
சிலர் இப்போது திருடர்களை பிடிக்கவில்லையா என்று கேட்கின்றனர். ஆனால் பிடிக்கும் போது கொக்கரிக்கக் கூடாது என்பதனை கூறிக்கொள்கின்றேன். 2015ஆம் ஆண்டில் ஊழல் மோசடியாளர்கள் தொடர்பான நடவடிக்கைகள் கண்காட்சி போன்றிருந்தது. ஆனால் தேசிய மக்கள் சக்தி சகல ஆவணங்களையும் முறையாக தயாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படக்கூடியவாறு நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
இதேவேளை நாட்டுக்கு பாதிப்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மற்றைய தரப்பினருக்கு கூறியுள்ளோம். அந்த ஒப்பபந்தங்களை மீளாய்வுக்கு உட்படுத்தி நாட்டுக்கு ஏற்றவாறு அதனை வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகளுடான சந்திப்பின் போதும் நாங்கள் இதனை கூறியுள்ளோம். மக்கள் வழங்கியுள்ள ஆணையின் தன்மைக்கு அமையவே நாங்கள் தீர்மானங்களை எடுப்போம் என்பதனை கூறியுள்ளோம். நாங்கள் அடுத்த 5 வருடங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவோம்.
புதிய அமைச்சுகளை உருவாக்குவோம். இதன்போது மிகவும் அனுபவம் வாய்ந்த குழுக்கள் தன்னார்வ அடிப்படையில் எங்களுடன் இணைவர். உயர்ந்த சம்பளத்தை பெறுபவர்களும் அவற்றை கைவிட்டு தன்னார்வ அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இணைந்துகொள்ள தயாராகியுள்ளனர்.
இதேவேளை தூய்மையான இலங்கையை அமைக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் தூய்மை வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். நாங்கள் மாற்றத்திற்கான யுகத்திலேயே நாங்கள் காலடி வைத்துள்ளோம்.
இந்நேரத்தில் நாங்கள் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறு நாங்கள் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் மக்கள் சொத்துக்கள், கோடிக் கணக்கில் வீணடிக்கும் அரசியலுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு அம்பியூலன்ஸ்கள் அடங்கலாக தலா 16 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை கூடிய விரைவில் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளோம். தற்போதைய சுற்றுநிருபத்திற்கமை 3 வாகனங்கள் வைத்திருக்கலாம் அவற்றை வழங்குவோம். ஆனால் குறித்த சுற்றுநிருபத்தில் திருத்தம் மேற்கொண்டு குழுவொன்றை அமைத்துள்ளோம். அதன்படி முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதை அரசாங்கம் நிறுத்தும். எவரும் கூச்சலிடக் கூடாது. எவருக்காவது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பாதுகாப்பு விடயத்தை காட்டி மக்கள் பணத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது.
இதேவேளை நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் கொலைகள் மற்றும் குற்றங்கள் இடம்பெறுவதை நாங்கள் நிறுத்த வேண்டும். அதற்காகவே மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அத்துடன் போதைப் பொருள் அற்ற இலங்கையை நாங்கள் அமைப்போம். கட்டம் கட்டமாக நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளும்.