ட்ரூடோவின் இந்தியா மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டே இருதரப்பு உறவு சீா்குலைய காரணம்!
இந்தியா மீதான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கனடா பிரதமா் ட்ரூடோ சுமத்துவதே இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.
மேலும், நிஜ்ஜாா் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா உள்பட சில இந்திய தூதரக அதிகாரிகளை கனடா தொடா்புபடுத்தியது. இதில் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் ஐந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டது.
இதுதொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால்,
”நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க கனடாவிடம் வலுவான ஆதாரமில்லை என அந்த நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பொதுவெளியில் ஒப்புக் கொண்டுள்ளாா். இதுவே அவா் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறாா் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா மீதான அவரின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளே இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படக் காரணமாக உள்ளது’ என்றாா்.