உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை நான் வைத்திருப்பது குற்றமென்றால்; ரணிலும் அநுரவும் குற்றவாளிகளே!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நான் வைத்திருப்பது குற்றமாகும் என்றால் அந்த அறிக்கைகளை வெளியிடாது தன்வசம் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவும் குற்றவாளிகளே எனவும், இதனால் எனக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க முன்னர் அவர்கள் இருவருக்கும் எப்படி தண்டனை வழங்குவது என்பதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூற வேண்டும் என்றும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தால் மாத்திரமே என்னிடம் உள்ள அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிப்பேன் என்றும், இல்லையேல் நான் கூறியபடி 7 நாட்களில் அந்த அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவேன் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகளை 7 நாட்களுக்குள் ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிட நேரிடும் என்று நான் கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், என்னிடம் இருக்கும் அறிக்கையை 3 நாட்களுக்குள் கையளிக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையை வைத்திருப்பது குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளதுடன், அந்த அறிக்கை எப்படி என்னிடம் வந்தது என்பதனை தேடிப்பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் நான் நிலவை காட்டும் போது நிலவை பாருங்கள். எனது விரலை பார்க்க வேண்டாம் என்றே நான் விஜித ஹேரத்திடம் கேட்கின்றேன். அரசாங்கம் அறிக்கைகளை வெளியிடாதிருப்பது தொடர்பாக கடந்த காலங்களில் கூறிவந்த தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த அறிக்கையை வெளியிட தயங்குவது ஏன் என்று கேட்கின்றேன். அமைச்சரின் கருத்தானது அறிக்கையை மறைக்க அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு என்னையும் உதவுமாறு கூறுவது போன்றே இருக்கின்றது.
இந்நிலையில் அறிக்கையை தங்களிடம் கையளிக்குமாறு கோருகின்றனர். ஆனால் அந்த அறிக்கைகள் இரண்டும் தங்களுக்கு கிடைத்தவுடன் அதனை வெளியிடுவதாக அமைச்சரோ ஜனாதிபதியோ உறுதியளிக்கும் வரையில் அவற்றை நான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை. மக்கள் பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது.
இந்த அறிக்கைகளை நான் வைத்திருப்பது குற்றமாகும் என்று அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அரசாங்கம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால் 7 நாட்களில் நிச்சயமாக நான் அறிக்கையை வெளியிடுவேன். என்னை அச்சுறுத்தி அறிக்கையை வெளியிடுவதை தடுக்க முடியாது என்பதனை கூறுகின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஜனாதிபதிகள் இந்த தாக்குதலை பயன்படுத்தியே வெற்றிபெற்றுள்ளனர். தற்போதைய ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறியே ஆட்சிக்கு வந்தார். இந்நிலையில் இந்த அறிக்கையை வெளியிட ஏன் தயங்க வேண்டும்.
இந்த அறிக்கை எனக்கு கிடைத்தமை தொடர்பாக தேடிபார்க்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த விடயத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்த அறிக்கை எப்படி வெளியானது என்றுதான் தேடிபார்க்க வேண்டும். அந்த அறிக்கையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் உள்ளன. இதனால் அந்த அறிக்கையில் உள்ள இணைப்புகளை வெளியிட வேண்டாம் என்று ஆணைக்குழுவின் பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தகவல்களை வெளியிடும் எலி யார் என்பது தொடர்பில் தேடிபார்ப்பது அரசாங்கத்திற்கு நல்லது என்று கூறுகின்றேன். இமாம் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜுன் 25ஆம் திகதி கிடைத்துள்ளது. ஆனால் 3 மாதங்களாக அந்த அறிக்கை பத்திரமாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி பதவியேற்று 3 கிழமைக்குள் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதன்படி தற்போதைய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் சார்பாக இல்லை என்பதாகவே தெரிகின்றது.
அறிக்கையில் வெளியிடக் கூடாது என்று ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவற்றை நான் வெளியிடப் போவதில்லை. எவ்வாறாயினும் அறிக்கையை வெளியிட முன்னர் என்னை கைது செய்வதற்காக அரச உயர்மட்ட கலந்துரையாடலொன்று நேற்று (நேற்று முன்தினம்) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கை வருவது போன்று ஜனாதிபதி செயலகத்தில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களும் எனக்கு வருகின்றது.
எனக்கு இந்த அறிக்கை ஒக்டோபர் 10ஆம் திகதியே கிடைத்தது. இந்த அறிக்கை உண்மையானதா என்று உறுதிப்படுத்திய பின்னரே நான் அந்த அறிக்கையை 7 நாட்களில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளேன்.
என்னிடம் இந்த அறிக்கை இருப்பது குற்றமாகும் என்றால் 3 வாரங்களாக இந்த அறிக்கையை வெளியிடாது வைத்திருந்த தற்போதைய ஜனாதிபதி எந்தளவு குற்றவாளியாவார். அதேபோன்று 3 மாதங்களாக அந்த அறிக்கையை வெளியிடாது வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்கவும் எந்தளவு குற்றவாளியாக இருப்பார். ஆனால் எனக்கு தண்டனை வழங்க திட்டமிட முன்னர் தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் தண்டனை வழங்குவது எப்படி என்று கூறுவதும் நல்லதே.
அதேபோன்று 2015 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் கூறியிருந்தனர். இதன்படி இந்த ஆவணங்களை வைத்திருந்தமை குற்றமாகும். இதன்படி தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் எந்தளவு குற்றத்தை செய்துள்ளனர் என்று கேட்கின்றேன். இதனால் நான் அந்த அறிக்கையை வைத்திருப்பது குற்றமாகும் என்று விஜித ஹேரத் கூறியதை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றேன். எவ்வாறாயினும் ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை நான் அந்த அறிக்கையை வெளியிடுவேன் என்றார்.