2030 க்குள் நேட்டோவை ரஷ்யா தாக்க முடியும்; ஜேர்மன் உளவுத்துறை எச்சரிக்கை
2030ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா நேட்டோவைத் தாக்கும் எனவும் உக்ரைனின் மேற்கத்திய ஆதரவு நாடுகளை நாசவேலைகள் மூலம் சீர்குலைக்கும் முயற்சிகளை ரஷ்யா முடுக்கிவிட்டதாக ஜேர்மன் உளவுத்துறைத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உக்ரைனின் இரண்டாவது பெரிய இராணுவ ஆதரவு நாடாக ஜேர்மனி இருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“ஆளணிகள் மற்றும் ஆயுதங்களைப் பொறுத்தவரை, ரஷ்ய படைகள் நேட்டோவிற்கு எதிராக இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் தாக்குதலை நடத்தும் திறன் கொண்டதாக இருக்கும்” என்று BND வெளிநாட்டு உளவுத்துறை தலைவர் புருனோ கால் நாடாளுமன்ற விசாரணையில் தெரிவித்தார்.
“விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாங்கள் ரஷ்யாவுடன் நேரடி மோதலில் இருக்கிறோம்” என்றும், அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியுடன் நேரடி மோதலை ரஷ்யா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்கோவிற்கும் அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணிக்கும் இடையே ஒரு நேரடி மோதல் “ரஷ்யாவிற்கு ஒரு விருப்பமாக மாறுகிறது” என்று கால் கூறினார்.
இதேவேளை, ஜேர்மனியின் உள்நாட்டு மற்றும் இராணுவ உளவுத்துறையின் தலைவர்கள் புன்டேஸ்டாக்கில் நடந்த விசாரணையில்
உக்ரைன் படையெடுப்பின் பின்னணியில் ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தனர்.
“ஜேர்மனியில் ரஷ்யாவின் உளவு, நாசவேலைகள் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டிலும் அதிகரித்து வருகின்றன” என்று உள்நாட்டு உளவுத்துறை தலைவர் தாமஸ் ஹால்டன்வாங் குறிப்பிட்டார்.
ரஷ்யாவும் தவறான தகவல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது, முக்கியமான இடங்களில் உளவு பார்க்க ட்ரோன்களை அனுப்பியதுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு சலுகைகளுடன் ஆட்சேர்ப்பு செய்ய விரும்புகிறது ஹால்டன்வாங் கூறினார்.
இதனிடையே, ஜேர்மன் ஆயுதப்படைகளை குறிவைத்து ரஷ்யாவின் உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதென்று இராணுவ உளவுத்துறையின் தலைவர் மார்டினா ரோசன்பெர்க் தெரிவித்துள்ளார்.
“உக்ரைனுக்கு ஜேர்மன் ஆயுதங்களை வழங்குவதை உளவு பார்ப்பது, இராணுவ பயிற்சி மற்றும் ஆயுதத் திட்டங்களின் கண்காணிப்பு ஆகியவை ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், உளவுத்துறைத் தலைவர்கள் மூவரும் ஜேர்மன் மண்ணில் உள்ள மற்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு கூடுதல் அதிகாரங்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.