ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை
ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி மற்றும் டென்மார்க் இடையில் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது.
மத்திய ஐரோப்பாவையும் ஸ்காண்டினேவியாவையும் இணைக்கும் உலகின் நீளமான ஆழக்கடல் சுரங்கப்பாதையான ஃபெமார்ன்பெல்ட் சுரங்கம் (Fehmarnbelt tunnel) 2029-ஆம் ஆண்டில் முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
11 மைல் நீளமான இந்த கான்கிரீட் ஆழ்கடல் சுரங்கம், டென்மார்க்கின் லொலேண்ட் (Lolland) தீவையும் ஜேர்மனியின் ஃபெமார்ன் (Fehmarn) தீவையும் இணைக்கிறது.
இந்த திட்டத்தின் மொத்த செலவு 6.1 பில்லியன் பவுண்டுகள் ஆகும் என மதிக்கப்படுகிறது.
இந்த சுரங்கத்தில் கார்கள் மற்றும் ரயில்கள் பயணிக்க முடியும்.
பால்டிக் கடலின் 130 அடி ஆழத்தில்அமைக்கப்படும் இந்த சுரங்கம், கம்பஹகன் (Copenhagen) மற்றும் ஹாம்பர்க் (Hamburg) நகரங்களுக்கிடையிலான பயணத்தை விரைவாக மாற்றும்.
தற்போது நான்கரை மணி நேரமாக இருக்கும் ரயில் பயண நேரத்தில், இந்த சுரங்கப்பாதை இரண்டரை மணி நேரத்த்தை குறைத்துவிடும்.
புது சுரங்கம் வழியாக மொத்தம் 150 நிமிடங்களில் பயணிக்க முடியும். கார்கள் இந்த சுரங்கத்தை 10 நிமிடங்களில் கடந்து செல்லலாம், ரயில்களுக்கு இதை கடக்க 7 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
Scan-Med corridor என்ற போக்குவரத்து நெடுஞ்சாலையின் முக்கியப் பகுதியான இந்த சுரங்கம், மால்டாவிலிருந்து வடக்கு பின்லாந்து வரை 3,000 மைல்களுக்கு மேல் நீளமான கொரிடாரின் மேம்பாட்டிற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
2021-ஆம் ஆண்டில் துவங்கிய கட்டுமான பணிகள், கடலடியில் 39 அடி ஆழத்தில் அகழ்வுப் பணிகளைச் செய்யத் தொடங்கியுள்ளன. மொத்தம் 89 கான்கிரீட் தொகுதிகள், ஒவ்வொன்றும் 712 அடி நீளமுடையவை, இந்த சுரங்கத்தை உருவாக்க பயன்படுகின்றன.
இத்திட்டத்திற்கான பெரும்பாலான செலவுகளை டென்மார்க் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, சுரங்கத்தில் விதிக்கப்படும் சுங்கக் கட்டணங்கள் மூலம் செலவை மீட்கும் முயற்சியில் உள்ளது.
இதற்கிடையில், சுரங்க கட்டுமானம் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பை சந்தித்துள்ளது, ஏனெனில் கடலடித் தோண்டுதல்கள் மீன்களின் வாழ்விடத்தை பாதிக்கலாம் என அவை அச்சம் தெரிவிக்கின்றன.