கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களை புறக்கணிக்கும் அரச பேருந்துகள்..!
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகின்றது.
இன்றும் அவ்வாறு மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலையில், காவல்துறையினர் தமது வாகனத்தில் மாணவர்களை பாடசாலையில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (14) காலை கிளிநொச்சி – முகமாலை, A-09 வீதி பளைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலைமை, கிளிநொச்சி ஏ.09 வீதியின் இத்தாவில், முகமாலை மற்றும் உமையாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலைமை காணப்படுகிறது.
மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள் நடத்துநர்கள் சரியாக செயல்படவில்லை என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மாணவர்கள் வீதியில் நின்று பேருந்தை மறிக்கும் போதும் அவர்களை ஏற்றாது செல்கின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளால் மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவோ, பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவோ முடியாத நிலைமையில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் ஊடகங்களில் பல்வேறு தடவைகள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டும் இதுவரை இந்த பிரச்சனை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே காணப்படுகிறது எனவும் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.