தேர்தல் களம்

தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டு போக தமிழர் விரும்பவில்லை- தமிழர் சம உரிமை இயக்கம் சுட்டிக்காட்டு..!

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் இதுவரை கிடைக்காத நிலையில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குள் அள்ளுண்டுபோக தமிழ் மக்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள தமிழர் சம உரிமை இயக்கம் தூய மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பசு சின்னத்திலும் வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டியிடும் தமிழர் சமஉரிமை இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான த.நிகேதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் வழிப்படுத்தலில் மாற்றத்திற்கான தமிழ் தேசிய சக்தியாக தமிழ் தேசிய தளத்தில் மக்கள் வாழ்வியலை மேம்படுத்தவே நாம் களம் கண்டுள்ளோம். தூய மாற்றத்திற்கான தமிழ் தேசிய களத்தில் தமிழர் சம உரிமை இயக்கத்தினர் யாழில் பசு சின்னத்திலும் வன்னியில் பூட்டு சின்னத்திலும் சுயாதீனமாக போட்டியிடுகின்றனர்.

தமிழ் மக்கள் யுத்தத்திற்கு பின்னரான 15 ஆண்டுகளில் தற்போது களத்திலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளையும் நம்பி களைத்து விட்டனர். நாம் இதுவரை வாக்களித்து தெரிவுசெய்தவர்கள் தங்களுக்குள் அடிபடுவதிலும் சுகபோகங்களை அனுபவிப்பதிலும் அதனைவிட பார் பெர்மிட் பெற்று மக்களை போதைக்கு அடிமையாக்கி இளையோரை அழிக்க துணை போகின்றனரே அன்றி மக்களுக்கான எந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை.

தமிழர் தரப்பின் இந்த கையறு நிலையில் தெற்கில் மாற்றத்தை எற்படுத்தியோர் வடக்கிலும் காலூன்ற முனைகின்றனர். தமிழர்களுடைய அடிப்படை அபிலாசைகளை சமஷ்டி முறை இணைந்த வடகிழக்கு மாநிலமோ சம உரிமைகளோ இன்னும் கிடைக்காத நிலையில், தெற்கின் அலையில் அள்ளுண்டு போக தமிழ் மக்கள் விரும்பவில்லை.

காலத்தின் தேவை கருதி குறுகிய அவகாசம் இருப்பினும் மாற்றத்திற்கான தூய பொது முகங்களாக சமூகத்தின் சகல தளங்களிலிருந்து தமிழ் தேசிய மனிதநேயச் செயற்பாட்டாளர்களான நிபுணர்களும் பெண்களும் இளையவர்களும் தியாக வேள்வியில் இளமைக்காலத்தை அரப்பணித்த தமிழ் தேசிய போராளிகள் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் நாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம்.

தொகுதிவாரியாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் நிறுத்தப்பட்டுள்ள எமது பொது முகங்களான முதன்மை வேட்பாளர் கல்வியியலாளர் கலாநிதி தே.தேவானந்த், ஊடகவியலாளர் ந. பொன்ராசா, சட்டத்தரணி ஜெ. நீலலோஜினி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி முன்னாள் உப அதிபர் அ.சிவஞானம் உள்ளிட்ட வேட்பாளர் குழாம் யாழில் பசு சின்னத்திலும், தமிழ் தேசிய போராளி முல்லை ஆனந்தன், முல்லையின் பட்டதாரி இளைஞர் கோகுலன், வன்னி மாற்றுத்திறனாளிகள் சங்க வவுனியா உபதலைவர் சாந்தகுமார், தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்க மன்னார் செயலாளர் திருமதி பாமினி உள்ளிட்ட குழாமினர் வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டிபிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தமிழ்த் தேசிய மறுமலர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.