”ஆட்டம்”… கதை -2… குதிருக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர்…மீனாசுந்தர்
சொர்ணத்தம்மாள் சுற்று ராட்டினத்தைப் போலத் தனது நத்தைக் கண்களை மேலும் கீழும் பெரியதாய் உருட்டிக் காட்டினாள். அனைவரும் கைகட்டி நின்று கொண்டிருந்தார்கள். முகங்களில் அப்படியொரு கலவர பீதி. அச்சத்தின் மிரட்சி படிந்த விழிகள். கை, கால்கள் சிலருக்கு ஆடைக்குள் நாட்டியமாடத் தொடங்கியிருந்தன. எச்சிலை விழுங்கிச் சமாளித்துப் பார்த்தும் முடியவில்லை. இன்னும் சிலர் உடலைக் குன்னிக்கொண்டு ஒடுங்கி நின்றிருந்தார்கள்.
சொர்ணத்தின் செம்பழுப்பு நிறப் பரட்டைத்தலை ஒழுங்கற்றுப் பறந்து கொண்டிருந்தது. அலங்கோலத்தில் நின்றபடி இடையிடையே தலையை உயர்த்தியும் தாழ்த்தியும், இட, வலமாகவும் சுழற்றி சுழற்றி ஆட்டிக் கொண்டேயிருந்தாள். மாராப்பைக் கூடச் சரி செய்யும் நிதானமில்லை அவளுக்கு. தளர்ந்த இரு மார்புகளுக்கிடையே குழியில், இறந்து கிடக்கும் ஒரு நாகத்தைப் போல ஆடாமல் அசையாமல் மாராப்புத் துணி ஒதுங்கிக் கிடந்தது. தொடர்ச்சியான ஆட்டத்தில் மூச்சு வாங்கிற்று அவளுக்கு. இரு கைகளையும் கோர்த்து உயரத் தூக்கியவாறு உடம்பை நெளித்து நெறித்த போது முறிந்து விழும் ஒரு முருங்கைக் கிளையைப் போல அவளிடமிருந்து நெட்டிகள் முறிந்தன. எதிரில் நிற்பவர்களை ஏறிட்டுப் பார்த்துப் பயமுறுத்தும் வண்ணமாய் விழிகளிரண்டையும் திரும்பவும் கோரமாய்ச் சுழற்றினாள். வெள்ளை விழிகளில் செவ்வரியோடிக் கிடக்கும் அவளின் இரத்த நரம்புகளைக் கூடக் காண முடிந்தது.
எதிரில் நிற்பவர்களை மேலோட்டமாய் ஒரு முறை பார்த்தாள் சொர்ணம். ஊடுறுவிப் பாயும் அவளது பார்வை யார் மீது பட்டு நிற்குமோவென மிரண்டு, சிலர் எச்சிலை விழுங்கி முன் நிற்பவர்களின் பின்னால் மறைந்தார்கள். எவரும் வாய் திறப்பதாய் இல்லை. சொர்ணம். “இஸ்… இஸ்… இஸ்..” என்று ஒவ்வொரு மூச்சுக்கு இடையேயும் சத்தம் எழுப்பிக் கொண்டேயிருந்தாள். அவ்விடத்தில் நிலவும் பேரமைதி ஒரு பய தோரணையை உண்டு பண்ணியிருந்தது. யாரோ ஒருத்தி தான் பின்னாலிலிருந்து கிசுகிசுத்தாள். அருகில் நின்றவன் அவள் கணவனாக இருக்க வேண்டும்.
“ஏங்க… இப்புடியே எல்லாரும் நின்னா என்ன தான் அருத்தம்?”
“ஏய்.. என்னை என்னடி பண்ணச் சொல்லுறே?”
எரிந்து விழுத்தான் அவன்.
“சின்னஞ் சிறுசுக கேக்க பயப்படுதுக… மத்தபடி எல்லாரும் பொம்மனாட்டிவளா நிக்கிறாளுவொ… என்னா சேதின்னு தான் கேளுங்களேன்!”.
தன்னைத் திடப்படுத்திக் கொண்டான் அவன். பாதங்களை நகர்த்தி சற்று முன்னேறி வந்து நின்றான். சொர்ணம் நிமிர்ந்து அவனை வைத்துக் கண் வாங்காமல் முறைத்துப் பார்த்தாள். அவன் கைகளைக் குவித்து, குனிந்து பணிவாய் நின்றான். பின் திக்கித் திணறி தடுமாற்றமான குரலில் கேட்டான்.
“என்ன தாயி? என்ன சேதின்னாலும் தயங்காம சொல்லிப்புடுங்க. நாங்க ஒண்ணும் ஒங்களுக்கு குத்தங் கொற வெக்க நெனச்சதில்லே.. அப்படியே இருந்தாலும் ஏதோ தெரியாமத்தான் செஞ்சிருப்போம். தாயி… எதுவாருந்தாலும் ஒம் புள்ளய்வ. என்னிக்கும் ஒனக்கு அடிமப் பட்டவுங்க தாயி நாங்க. தப்பா எடுத்துக்காம நீங்க தான் பொறுத்து எங்களுக்கு நல்லது பண்ணனும்.”
அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது.
குரல் பிசிறடித்து பிசிறடித்து வார்த்தைகள் வெளி வந்தன. சொர்ணம் வானத்தை நோக்கி முகத்தை அன்னாத்திக் கொண்டு பலமாய் அவ்விடம் அதிரச் சிரித்தாள். இடையிடையே கை கொட்டிக் கொண்டாள். மீண்டும் சிரிப்பு, பின் மீண்டும் கை கொட்டல். ஆழ்ந்து இழுத்தவாறு வெளிப்பட்ட மூச்சில் அவளது வயிறும் மார்பும் ஏறி இறங்கிக் கொண்டேயிருந்தன. எல்லா முகங்களும் மேலும் இறுகி ஒளியற்று இருண்டன.
“என்ன கொற வச்சிருக்கோம்ன்னா கேக்குறே படவா?”
திரும்பவும் பலமான சிரிப்பு. நாக்கை மடித்துப் பயமுறுத்துவதைப் போல அப்படியொரு கோரக்காட்சி. உடம்பை ஒருமுறை பலமாகக் குலுக்கிக் கொண்டாள். அவள் அனாயசமாக அவனை வாடா போடாவென்று விளித்தாள். அவன் தெய்வத்திடமிருந்து கிடைக்கும் மரியாதையாக அதை ஏற்றுக் கொண்டு பக்தியாய் நின்று கொண்டிருந்தான்.
“சொல்றேன்டா சொல்றேன்.’
பற்களைக் கடிக்கும் சப்தம் நறநறவெனக் கேட்டது. அவனை எரித்து விடுவதைப் போலத் திரும்பவும் முறைத்தாள். அவன் பவ்யம் காட்டி நின்றான்.
“மன்னிச்சிரு தாயி. சொன்னா நிவர்த்தி பண்ணிடுறோம்”
அவ்வளவு தான்.
“த்துா!“
எதிர்பாரா சமயமொன்றில் பளீரென அறையும் மழைக் காற்றைப் போலக் காறித் துப்பினாள் அவனது முகத்தில். எச்சில் சிதறல்கள் காற்றில் பூந்தூவலாய்ச் சிதறிப் பறந்தன.
மொத்தக் கூட்டமும் அதிர்ந்து ஓரடி பின் வாங்கியது. முகத்தில் வழியும் எச்சிலைத் துடைப்பது கூடப் பெரும் பாவமெனவும் பெருங் குற்றமெனவும் அவனும், அவர்களும் எண்ணி செய்வதறியாது திகைத்து நின்றனர்.
“மொக்காயி கோவங்கொண்டா முடிச்சிடுவேண்டா… முடிச்சிடுவேன்.. ஒன்னுமே இல்லாம முடிச்சிடுவேன்!”
குரலில் அப்படியோர் அழுத்தம். கடன் கொடுத்தவன் திருப்பித் தராதவனை மிரட்டும் தொனி.
“இல்ல தாயி…. ”
அவன் ஏதோ சொல்ல எத்தனித்தான். அதற்குள் இடைமறித்தாள் சொர்ணம். அதாவது தற்போது மொக்காயி சாமி.
“நிறுத்துடா.. நிறுத்து! எதுவும்ஞ் சொல்லாத.. குல தெய்வத்த மறந்தவன் எந்தக் கொம்பன்னாலும் நாசமாத் தான் போயிருக்கான்.. நானும் நம்ம புள்ளய்வ தான.. திருந்திடுவானுங்கன்னு பொறுத்திருந்தேன். இனிமேவும் என்னக் கவனிக்கலேன்னா நான்ஞ் சும்மா இருக்க மாட்டேன். அழிச்சிப்புடுவேன் அழிச்சி. பற்றுக்கொடி கூட இல்லாம ஆக்கிப் புடுவென் ஆமா… இஸ்…. இஸ்… இஸ்… இஸ்…“
அவர்கள் செய்யக் கூடாத தவற்றைச் செய்து விட்டதைப் போல விடாமல் சினம் பொங்கக் கத்திக் கொண்டேயிருந்தாள் சொர்ணம். அவளின் ஒவ்வொரு சொல்லுக்கும் நின்றிருந்தவர்கள் வாயில் அடித்துக் கொண்டார்கள்.
“இல்ல தாயி… ஒண்ண மறக்கலே. மறக்க மாட்டோம்… ரெண்டு மூணு வருசமாவே மழத் தண்ணியில்லே… எங்க பாத்தாலும் பசியும் பஞ்சமும் குடியா கெடக்கு. ஒனக்கு தெரியாததா? நீயும் பாத்துக்கிட்டுத் தான இருக்க? இந்த வருசந் தான் ஒம் புண்ணியத்துல எதோ வெள்ளாம நடக்குது. இனிமே ஒனக்கு முடிஞ்சளவு செய்யாம இருக்க மாட்டோம். எங்க கய்யில கெடக்கிறத ஒன்ங் காலடியில கொண்டு வெக்க தவற மாட்டோம் தாயி!”
சொர்ணம் விடுவதாயில்லை.
‘ஆனா ஒன்னு என் சொயரூவம் ஒங்களுக்கு தெரியாதுடா… நாவகத்துல வச்சிக்கங்க. என்ன ஏமாத்தணுன்னு நெனச்சா…? பற்களை நறநறவெனத் திரும்பவும் கடித்தாள். அப்படியே கண்களை மூடி, கைகளை உயர்த்திக் கோர்த்துக் கொண்டு உடலைப் பின்புறமாய் வளைத்தாள்.
வியர்வை ஆறாய்ப் பெருக்கத்தோட அப்படியே மயங்கிச் சரிந்தாள். உடம்பு பிசுபிசுத்துக் கிடந்தது. இப்போது இஸ்… இஸ்… சத்தமில்லை. மூச்சு இரைப்பெடுத்து மேலும் கீழுமாய் ஏறியிறங்க, கடும் பணி செய்தவளைப் போலக் களைத்துக் கீழே கிடந்தாள்.
யாரோ ஒருத்தி குவளையில் தண்ணீர் கொண்டு ஓடி வந்தாள். முகத்தில் நீர் தெளித்தார்கள். அவள் லேசாய் விழிகளை அசைத்தாள். சிறிது நேரத்திற்குள் எழுந்து ஒன்றுமே தெரியாத மாதிரி கேட்டாள்.
“என்ன நடந்துச்சி? ஏன் எல்லாரும் கூடி நிக்கிறீங்க?’
“மொக்காயி வந்துட்டுப் போனிச்சி?” என்று தொடங்கி குத்தம், குறை, கோபம் இருப்பதாக நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்கள்
“சாமி குத்தம் ஆவாதுப்பா… இதுக்கு ஏதாவது வழி பண்ணனும்” என்றவாறே கூட்டம் கலைந்து போயிற்று.
——-
சாயந்திர நேரம். திண்ணையில் பிரக்ஞையற்று மல்லாந்து கிடந்தான் ராசய்யன். தனக்கு இப்படியொரு வாழ்க்கை அமைந்து விட்டதேயென நொந்தபடி அமர்ந்திருந்தாள் சகுந்தலா. கண்ணீர் வாய் வரையும் வழிந்து நீளங்களை அளந்து கொண்டிருந்தது.
அந்தப் பகுதியில் இருபது வீடுகள் இருக்கலாம். எல்லாமும் அன்றாடங் காய்ச்சிகளின் தென்னை ஓலைக் குடிசைகள். தெருவென்று சொல்லுமளவிற்கு ஒழுங்கிலமையாமல் முன்னும், பின்னுமாய் நாகரீகமற்றுக் காட்சியளித்தன அவை. படிப்பின் வாசனையைக் கூட அறிந்திராத பாமர அப்பாவி மனிதர்கள். வயல் சேற்றில் நாளும் உழலும் விவசாயக் கூலிகள். ராசய்யனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த புதிதில் சகுந்தலா அந்த ஊரையும், தெருவையும் நினைத்துப் பலமுறை அரற்றியிருக்கிறாள்.
இந்த ஊரை ஒப்பிடுகையில் சகுந்தலா பிறந்த ஊர் அவ்வளவு மோசமானது இல்லை. ஊரோடும், இந்தத் தெருவோடும், இங்குள்ளோரின் கல்வி அறிவோடும் ஒப்பிடுகையில் எல்லாவற்றிலுமே அவர்கள் ஓரளவு மேம்பட்டே இருந்தார்கள். அதுவும் கிராமமெனினும் நாகரீகம் மெல்ல குடிகொள்ளத் தொடங்கியிருந்தது அந்நிலத்தில். ஆனால் இங்கே? ஆத்திரத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது. இனி வாழ்நாள் முழுதும் இங்கே தானா? என நினைத்த போது அவளுக்கு வந்த அழுகைக்கு அளவில்லை.
சகுந்தலா பெரியளவில் படித்திருக்கவில்லை. எட்டாம் வகுப்பை நிறைவு செய்திருந்தாள். அந்தத் தெருவைப் பொருத்தமட்டில் இப்போது நிறைய படித்தவள் அவளொருத்தி தான். வாழ்க்கைப்பட்டு வந்த புதிதில் சகுந்தலாவை அதிசயம் போல அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். அவளும் அவர்களை அப்படியே பார்க்க நேர்ந்தது. இப்போது எல்லாமும் பழகிப்போய் விட்டது. இருப்பினும் அங்கிருந்தவர்களின் செய்கைகளும் பழக்கக்கங்களும் அவளுக்கு எரிச்சலையும் சிரிப்பையும் ஒருசேர உண்டு பண்ணிக் கொண்டிருந்தன.
ராசய்யா நிதானமில்லாமல் சவமாய்க் கிடந்தான். குடியின் வாடை குடலைப் பிடுங்கிற்று. தொடைப் பகுதியில் விலகிக் கிடந்த அவனது துணியை சரி செய்து விட்டு நகர்ந்து உட்கார்ந்தாள். எப்படித் தான் இவன் கூட சொச்ச காலம் வாழ்வதோவென நினைத்தவளுக்கு இயலாமையின் வெளிப்பாடாய் பெருமூச்சு ஒன்று நெஞ்சு விம்ம வெளியேறிற்று.
கிளிப்பிள்ளைக்குப் படிப்பதைப் போல எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டாள். சொல்லும் போது தஞ்சாவுர் தலையாட்டி பொம்மை மாதிரி சரி சரியென ஆட்டுகிறான். பிறகு எப்படித் தான் புத்தி பெசகிப் பேதலித்துப் போவுதோ?! தெரியலையே என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே தெருமுக்கில் உயிரை உலுக்குவது மாதிரி “க்ஓஓ….”வெனக் கீச்சு குரலில் யாரே ஒருத்தி அலறுவது கேட்டது. திடுக்கிட்ட சகுந்தலாவுக்கு நெஞ்சு படபடவெனத் தாறுமாறாக அடிக்கத் தொடங்கிற்று. வெளியில் கும்மிருட்டு பூகோளமாய் திரண்டு நின்று கொண்டிருந்தது. தன்னந்தனியே எட்டிப் பார்க்கவும் அச்சமுற்றவளாய் ராசய்யனுடன் மிக நெருங்கி அமர்ந்திருந்தாள்.
“ஏங்க. ஏங்க.”
ராசய்யாவை எழுப்பிப் பார்த்தாள்.
எந்தப் பலனுமில்லை. மரக்கட்டை மாதிரி அசைவற்றுக் கிடந்தான் அவன். வெளியில் எல்லோரும் வடக்கு நோக்கி ஓடும் காலடிச் சப்தங்கள் கேட்டன. பக்கத்து வீட்டுப் பவுனம்மாவும் ஓடிய படியே “நிய்யி வரலயாக்கா? என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திராமல் பாய்ந்து ஓடினாள்.
இவளால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து இவளும் ஓடினாள். கடைசி வீட்டின் எதிரே கூட்டம் திரண்டு நின்றது. நடுவில் மங்கலான மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சம். என்ன நடக்கிறது என்று தெரியவோ யூசிக்கவோ முடியவில்லை. படபடவென ஓடிக் கூட்டத்தினுள்ளே நுழைந்து கழுத்தைத் தூக்கி எட்டிப் பார்த்தாள்.
அலங்கோலமாய் நின்றிருந்தாள் பொன்னாத்தா.
இங்கேயும் எல்லோரும் கைகட்டி, அடக்கம், ஒடுக்கமாய் நின்றிருந்தார்கள். ஆண்கள் கூட அவள் சொல்வதே மந்திரம் என்பதைப் போலவும், அவன் இவன் என்று அவள் ஒருமையில் அழைத்துப் பேசுவதைச் சகித்தவாறு நடுங்கி ஒடுங்கி “சொல்லு தாயி.. எனப் பக்தி பரவசமாய் நிற்பது வியப்பாகவும், கேலியாகவும் இருந்தது சகுந்தலாவிற்கு.
பொன்னாத்தாவின் கணவன் நாகராசன் அவனுடைய ஆண் அடையாளங்களை எல்லாம் (?) உதறி விட்டு நெடுஞ்சான் கிடையாக மனைவியின் காலில் விழுந்து வணங்கியதை அத்தனைச் சீக்கிரம் அவளால் மறந்து விட முடியவில்லை. இது குறித்து முன்பே ஒரு முறை ராசய்யனுடன் கிண்டலடித்துச் சிரித்திருக்கிறாள் சகுந்தலா அப்போதெல்லாம் ராசய்யா அவளது வாயைப் பொத்துவான்
“ஒனக்கென்ன பயித்தியமாடி புடிச்சிருக்கு? சாமிய குத்தம் சொல்லி சிரிக்கிறியே.. கோவம் திரும்பினிச்சின்னா அப்பறம் தெரியும்? அத நம்பினா எல்லாமும்ஞ் செய்யும், எதித்தா
மண்ணாக்கிப்புட்டுப் போயிறும். தெரியும்ல்ல?.”
பக்திச் சிரத்தையோடுப் பொறிவான் ராசய்யா.
“அவங்க ரெண்டு பேரு மேலேயும் சாமி வந்து குத்தம் சொல்லவுமே எனக்குப் பயமா இருக்கு சகுந்தலா. நம்ம குல தெய்வத்த கும்பிட்டும் நாலஞ்சி வருசம் ஆவப் போவுது. சீக்கிரமா சாமி கும்பிட்டுடனும்.”
முன்பு ஒருமுறை ராசய்யா சொல்லியிருக்கிறான். எல்லாமும் நினைவில் கிளர்தெழுந்து ஓடின. சிறிது நேரத்திற்குள்ளாகப் பொன்னாத்தா மேல் வந்த சாமியும் மலையேற, அதாவது மயங்கி விழ கன்னத்தில் போட்டுக் கொண்டு கூட்டம் கலைந்துப் போயிற்று.
வீட்டிற்கு வந்தவள் ராசய்யாவிற்கு எதிர்புறம் பாய் விரித்துப் படுத்துக் கொண்டாள். இரவு முழுவதும் அவளுக்குப் பொன்னாத்தாவின் நினைவாகவே இருந்தது. கனவில் பொன்னாத்தாவின் செய்கைகள் வந்து பயமுறுத்திக் கொண்டேயிருந்தன.
………..
விடிந்தது. சகுந்தலா சுத்தமாய் பேசவில்லை ராசய்யனுடன்.
“எம்மேல எதுவும் கோவமாருக்கியா சவுந்தலா?”
ராசய்யா வலிய வந்து கேட்டான். அவளுக்கு ஆத்திரத்தை அடக்க முடியாமல் விம்மினாள். இவனுக்குக் காலையிலேயே பெரும் சங்கடமாகப் போயிற்று. கேட்டிருக்கக் கூடாதோவென நினைத்தான். எதற்காக இப்படி அழுகிறாள் என்பதை அவனால் ஊகிக்க முடியாமலா போய்விடும்? யூகித்து விட்டான்.
“நிய்யி எதுக்கு அளுவுறங்கறது புரியிது சவுந்தலா. நேத்திக்கி உடம்பு ரொம்ப வலிக்கிற மாரி இருந்திச்சி… அதான்…” என்றான் தயங்கிவாறு.
“போதும். ஒங்களுக்கென்ன சாக்கு போக்கு சொல்றத்துக்கு சொல்லியா கொடுக்கணும்?
“செரி.. செரி அளுவாத! இனிமே சத்தியமா சொல்றேன்… குடிக்க மாட்டேன்”
“இத்தோட எத்தன சத்தியம் பண்ணிட்டீயொ?”
“இந்த தரம் ஒன்ந் தலயிலடிச்சிச் சத்தியம் பண்றேன். இனிமெ அந்தப் பக்கம் தல வெச்சிக் கூடப் படுக்க மாட்டென்”
“வேண்டாம்… ஒங்கள நம்ப முடியாது. நீங்க நம்ம கொலசாமி மின்னடிம்மா மேல சத்தியம் பண்ணுங்க. அப்பத் தான் நம்புவேன்”
குலசாமியென்றதும் ராசய்யனுக்கு சற்றுத் தயக்கமாக இருந்தது. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டு சகுந்தலா மேலும் பிடியாய் அதிலேயே நின்றாள். வேறு வழியின்றி ராசய்யன் மின்னடிம்மா மேல் சத்தியம் செய்தான். அவள் நிமிர்ந்து நேராய் அவனைப் பார்த்தாள்.
“எங்க இப்பவாவது ஒரு தரம் சிரி… நான் வேலக்கி போவனும்!’
அவள் வழிந்த கண்களோடுத் துடைக்காமல் கூடச் சிரித்தாள். அவன் போய் விட்டான்.
எத்தனையோ முறை இப்படிச் சொல்லி மீறியிருக்கிறான் ராசய்யன் என்றாலும், இம்முறை குலதெய்வத்தின் மீது சத்தியம் செய்திருப்பதால் மிகவும் தெம்பாய் உணர்ந்தாள் சகுந்தலா. குல தெய்வத்திற்கு இவர்கள் எப்படியெல்லாம் பாத்தியப் பட்டவர்கள் என்பதைக் கண் கூடாகக் கண்டவளல்லவா அவள்?!.
அன்று மாலை மசங்கிய நேரம். வழக்கம் போலவே அவளது எண்ணத்தில் மண் விழுந்திருந்தது. சத்தியத்திற்குக் கட்டுப்படாமல், நடக்கவும் நிதானமின்றி தடுமாறி வந்து பொத்தென திண்ணையில் விழுந்தான் ராசய்யா. உச்சகட்ட போதையில் குழறிய நாக்கைச் சரி செய்ய முயன்றான். முடியவில்லை.
“என்ன ம..ன்னிச்..சிடு சவுந்..தலா” என்று கைகளை உயர்த்திக் கும்பிட்டான். அக்கோலத்தில் அவனைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதால், கண்டதும் அதிர்ந்து செய்வதறியாது திகைத்து நின்றாள் சகுந்தலா.
“அடப் பாவி மனிசா… நிய்யி திருந்தவே மாட்டியா?…”
துக்கம் தாங்காமல் பெருங்குரலெடுத்து ஓவெனக் கதறினாள் சவுந்தலா. அவனது சத்தியம் நினைவில் வந்து உறுத்த விம்மினாள். அழுகையில் கண்களும் முகமும் வீங்கி விடுமோவெனப் பயமாய் இருந்தது. என்ன நினைத்தாளோ திடீரென அழுகையை நிறுத்தி அவனையே சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தாள். ஏதோ முடிவெடுத்து விட்டவள் போலத் தீர்மானமாய் வெடுக்கென எழுந்தாள்.
“இத இப்புடியே விடப்புடாது. இதுக்கு ஒரு முடிவு கெட்டியாவணும்”
சவுந்தலாவுக்கு மனசுக்குள் மின்னலடித்தது. வாசலில் வந்து நின்று கொண்டாள்.
“க்ஓஓஓ….”வென ஊர் அதிர ஒரு கூக்குரல் போட்டாள். அவள் எதிர்பார்த்ததைப் போலவே நாலாபுறமிருந்தும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமெனத் தலை தெறிக்க ஓடி வந்தார்கள். சிறிது நேரத்திலேயே நல்ல கூட்டம்.
“நான்ந் தான் மின்னடிம்மா வந்திருக்கேன்டா..”
முடிகளை அவிழ்த்துப் போட்டுத் தலையை ஒரு சுழற்று சுழற்றினாள் சகுந்தலா. தலை கழன்று தனியாய் வந்து விடுமோ என்றளவிற்குச் சுழற்றலின் வேகமிருந்தது. சொர்ணத்தம்மாள் மற்றும் பொன்னாத்தாவின் செய்கைகளை மனதிற்குள் இருத்திக் கொண்டு ஒவ்வொன்றாய்ப் பின்பற்றினாள். இடையிடையே “இஸ்.. இஸ்…” சப்தத்தை மறவாமல் இணைத்துக் கொண்டாள்.
“அடேய்ய்ய்ய்ய்…… !”
பல்லை நறநறவெனக் கடித்தவாறு வெறி கொண்டவள் போலத் திண்ணையை நோக்கி ஓடினாள்.
போதையில் மயங்கி கிடந்த ராசய்யனை நிமிர்த்தி பலம் கொண்ட மட்டும் ஓங்கி “பளார்.. பளார்” என இரண்டு அறை விட்டாள்.
“சொன்ன வாக்க காப்பாத்த மறந்துட்டியேடா… மின்னடிம்மான்னா என்னான்னு நெனச்சேடா?”
“டா..” வைச் சற்று அழுத்திப் போட்டாள். ராசய்யனுக்கு நொடியில் போதை தெறித்து ஓடிற்று. கூட்டம் பயபக்தியாய் சகுந்தலாவைப் பார்த்து வணங்கி நின்றது. சிலர் அவளது கால்களில் விழுந்து எழுந்து கொண்டிருந்தார்கள். நாக்கை ரெட்டையாய் மடித்துக் துருத்திக் காட்டினாள் சகுந்தலா. குழந்தைப் பருவத்தில் விளையாடும் போதே அதில் நன்கு பயிற்சி பெற்றிருந்தாள் செய்கை ஒவ்வொன்றிலும் பொன்னாத்தாவையும், சொர்ணத்தம்மாளையும் மிஞ்சினாள். ஓரக் கண்ணால் ராசய்யனைப் பார்த்தாள். அவனைப் பார்க்க பாவமாய் இருந்தது. சுதாரித்து விழிகளை பெரிதாக்கி உருட்டினாள். அவன் நிற்கும் கோலத்தைப் பார்த்துச் சகுந்தலாவிற்கு உள்ளுக்குள் சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டே தலையை சுழற்றி சுழற்றி ஆடிக் கொண்டிருந்தாள்.
…………………………………………………
தொடர்புக்கு
மீனாசுந்தர், 7010408481 / 9442510251