தெமோதர படப்பிடிப்பால் 150 மில்லியன் ரூபாய் வருவாய்: உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு வரவேற்பு
எல்ல – தெமோதர இடையேயான 9 வளைவுகள் பாலத்தில் இந்திய – இலங்கை இணைந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு 150 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர்களில் ஒருவரான சியாவுல் ஹசன் தெரிவித்துள்ளார்.
மிராய் (Mirai) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை துருக்கியில் காணப்படும் ஒரு வளைவு பாலத்தில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் உள்ள ஒன்பது வளைவுகள் பாலம் அதை விட அழகாக இருப்பதால் இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு திரைப்படமான மிராய் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், பெங்காலி, மலையாளம் என ஆறு மொழிகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் கட்டன்நேரு இயக்கத்தில் ஜெகபதி பாபு, தேஜா சாஜா, மனோஜ் குமார் உட்பட சுமார் அறுபது நட்சத்திரங்கள் நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மலையக புகையிரத சேவைகள் 09ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கொழும்பு கோட்டையில் இருந்து எல்ல புகையிரத நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எல்ல – பதுளை – பண்டாரவளைக்கு இடையில் பகல் வேளைகளில் பயணிகளுக்காக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் துணை பொது மேலாளர், ஏ.என்.ஜே. இடிபோலகே தெரிவித்தார்.
மேலும், இந்தப் படப்பிடிப்பின் பின்னர் இலங்கையிலுள்ள தெமோதர ஒன்பது வளைவுப் பாலம் மீது உலகளாவிய ரீதியில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.