பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
” இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எமது கட்சியில் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வவுனியாவிலே வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்ற காரணத்தினாலே யாழ். மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் இந்த வேட்புமனுவைக் கையளித்துள்ளார்.
நாளை(இன்று) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைகின்றபோது அந்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று அறிந்து எங்களுடைய மற்றைய கருத்துக்களை நாங்கள் சொல்வோம்.
ஆனாலும், இந்தத் தடவை எங்களுடைய வேட்புமனுவிலே இளையவர்களுக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல தடவைகள் நாங்கள் சொல்லி வந்த போதும் அது இந்தத் தடவை பெருமளவுக்குச் சாத்தியமாகி இருக்கின்றதென்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றோம்.
அதிலும் இம்முறை இரண்டு பெண் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அதிலும் கடந்த தேர்தலை விடவும் ஒன்றிலிருந்து இரண்டாக உயர்ந்துள்ளமை நூறு சதவீத அதிகரிப்பாகும்.
எங்களுடைய வேட்பாளர்களின் சராசரி வயது 48 ஆகும் . இந்த ஒன்பது பேரினதும் சராசரி வயது ஐம்பதுக்கும் குறைவாகத்தான் இருக்கின்றது. இது முற்போக்கான நல்ல விடயம் என்பதையும் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.” என்றார்.