புலிகள் காலத்து 3 முக்கிய விடயங்களே எமது இலக்கு
தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில்இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனு தாக்கல் பின்னர் ஊடகங்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தற்போது தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம் பெற்ற நிலையில் இளைஞர் யுவதிகள் மாற்றத்திற்காக ஒன்றிணைந்து வாக்களித்தார்கள்.அவ்வாறான ஒரு மாற்றத்தை தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் சராசரியாக 42 வயதுக்கு உட்பட்டவர்களை வேட்பாளர்களாக இணைத்துள்ளோம்.
எல்லோரும் இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என கூறுகின்ற நிலையை பார்க்கும் போது அரசியலைப் பொறுத்தவரையில் அறுபது வயது வரை சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.ஏனெனில் அரச சேவையும் அறுபது வயதாகக் காணப்படுகின்ற நிலையில் எனது வயது முதியவர் ஆகையால் மான் சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களுக்கு பின்னணியில் நின்று ஆலோசனை வழங்குவேன்.
எமது கட்சி 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மூன்று முக்கிய விடயங்களை முன்னிறுத்தி ஏனைய அரசியல் கட்சிகளை விட முன்னுதாரமான விடயங்களை எமது யாப்பில் ஏற்படுத்தியுள்ளோம். புலிகள் காலத்து தற்சார்பு , தன்னாட்சி மற்றும் தன்னிறைவு என்ற மூன்று முக்கிய விடயங்களை முன்னிறுத்தி எமது கட்சி பயணிக்கும்.
ஆகவே எமது கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.