வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை
பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அரசியல்வாதிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் வேட்புமனுக்களை கையளிக்கும் போது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கணிசமான இடத்தை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சிலர் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்பதை அவதானித்துள்ளோம்.
மேலும்,மக்கள் அந்தந்த கட்சியால் வேட்புமணுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர்.
எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தமது கட்சி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தெரிவு செய்யாமல் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கணிசமான வாய்ப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டுமென கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இந்நாட்டில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். அந்த வகையில் குறிப்பாக அவ்வீதம் நீண்டகாலமாக 50% முதல் 52% வரையில் காணப்படுகிறது.
ஆனால், இந்நாட்டு வரலாற்றில் பெண்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் 6% வீதத்தினை விட அதிகரிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதன் காரணமாக ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.