1350 ரூபாய் அடிப்படை சம்பளம்; நாளை முதல் வழங்கப்படவுள்ளது
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான நாளாந்த குறைந்தபட்ச சம்பளமான 1,350 ரூபாவையும் அறுவடைக்கான மேலதிக கொடுப்பனவாக 50 ரூபாவையும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ஆம் திகதி முதல் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சம்பளச் சபை ஆகியவற்றுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், உடன்படிக்கை ஒன்று முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வர்த்தமானியின் பிரகாரம், உள்ளூர் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒக்ரோபர் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 1,350 ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைச் சம்பளமான ரூ.1,350, EPF மற்றும் ETF ஆகியவற்றுக்கான பங்களிப்புகளைத் தவிர்த்து வழங்கப்படுவதாகும்.
வழக்கமாக மாத இறுதியில் கணக்கிடப்படும் தொழிலாளர்களின் ஊதியம் அடுத்த மாதம் 10ம் திகதி முதல் வழங்கப்பட உள்ளது.
செப்டம்பர் 10ஆம் திகதியன்று ஏற்பட்ட ஊதிய ஒப்பந்தம் முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது.
நியாயமான சம்பளத்திற்காக நீண்டகாலமாகப் போராடி வரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அனைத்துப் பங்குதாரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய சம்பளக் கட்டமைப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.