இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்தில் 19 வெற்றிடங்கள்: 390 அமர்வுகள் இடம்பெற்றதாக தகவல்
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் 19 வெற்றிடங்கள், 04 ஒத்திவைப்புகள் மற்றும் 390 அமர்வுகள் பதிவாகியுள்ளன.
2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வு ஆரம்பமாகியதுடன், 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 66ஆவது சரத்தின்படி, 19 நாடாளுமன்ற ஆசன வெற்றிடங்கள் 9ஆவது நாடாளுமன்றத்தில் பதிவாகியுள்ளன.
18 தடவைகளில் 16 உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தை மொத்தமாக 241 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளனர்.
தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்திற்குத் தேர்வான ஜயந்த கெட்டகொட பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டதுடன், முஜிபுர் ரஹ்மான் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உறுப்புரிமையை இழந்ததால் அவருக்கு பதிலாக முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அதேபோன்று தேசிய பட்டியல் எம்.பியான ஹரீன் பெர்னான்டோவும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார். என்றாலும் அவரது வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படாமலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இந்நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து எட்டாவது நிறைவேற்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தேர்வானமை ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாகும்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதன் பின்னர் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக 16 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்பாதாவது நாடாளுமன்றத்தில் 04 ஒத்திவைப்புகள் பதிவான நிலையில் முதல் 02 ஒத்திவைப்புகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மூன்று மற்றும் நான்காம் ஒத்திவைப்புகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்தனர்.