வீட்டில் வளர்க்கப்படும் அலங்கார மீன்கள்; மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்
வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. மன அழுத்தம் போன்றவற்றிலிருந்தும் விடுபடுவதற்காகத் தான்.
அதிலும் குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் மீன்களை சிறிது நேரம் கவனித்துக்கொண்டிருந்தால் மனம் அமைதியடைவதோடு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் குறைவதாகக் கூறப்படுகிறது.
அலங்கார மீன்களை வளர்ப்பதற்கென்று சில தொழில்நுட்பங்கள் உள்ளன.
மீன் தொட்டி
உங்களுக்கு தேவையான சிறிய மீன் தொட்டிகள் முதல் பெரிய மீன் தொட்டிகள் வரையில் கடைகளில் விற்கப்படுகின்றன. எதுவித நீர்க்கசிவும் இல்லாத தொட்டியை தெரிவு செய்ய வேண்டும்.
மீன் வளர்க்கும் தொட்டியின் ஆழம் மற்றும் அகலம் இரண்டும் ஒரே அளவாக இருக்க வேண்டும்.
சமதளமான இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும்.
மண், நீர்
நன்றாக சுத்தமாக்கப்பட்ட மணலை தொட்டிக்குள் நிரப்பி, அதில் நீர்வாழ் தாவரங்கள், பாசி வகைகள், சிறிய மரக்கட்டை போன்றவற்றை இட்டு, மீன்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அவற்றை மாற்ற வேண்டும்.
அல்லது எளிமையாக அமைக்க வேண்டும் என்றால், சிறிய கூழாங்கற்களை போடலாம்.
பின் எந்த அளவுக்கு நீர் நிரப்ப விரும்புகிறோமோ அந்த அளவுக்கு நீரை நிரப்ப வேண்டும்.
நீர்வாழ் தாவரங்கள்
நீர் வாழ் தாவரங்கள் மீன்கள் சுவாசிக்கத் தேவையான ஒட்சிசனை வழங்குகிறது. முட்டையிடும் மீன்கள் இந்த தாவரங்களில் முட்டையிடும்.
வளர்க்கும் முறை
புதிதாக வாங்கி வரும் மீன்களை நல்ல தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் ஐந்து சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் விட்டு உடனே எடுத்துவிட வேண்டும்.
கண்ணாடிக் குடுவையில் போட்டு ஒரு வாரம் வரையில் வைத்திருந்து மீன்களுக்கு எதுவித நோய்களும் இல்லையென தெரிந்த பின்னர் அவற்றை ஏனைய மீன்கள் வாழும் தொட்டிக்கு மாற்றலாம்.