பலதும் பத்தும்

ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

சுரேஷ் சுதா அழகன் மெமோரியல் அரசு மேல்நிலைப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்,கே மணிமேகலை, எஸ் திவ்யதர்ஷினி மற்றும் எஸ் கனிஷ்கஸ்ரீ ஆகியோரே இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

குழி தோண்டி விளையாடிக் கொண்டிந்த வேளையில் அவர்கள், பழங்கால நாணயங்கள், பானை ஓடுகள் மற்றும் கல் கல்வெட்டுகளை மீட்டுள்ளனர்.

தகவல் அறிந்த பாரம்பரிய சங்க செயலாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான வி.ராஜகுருஇ குறித்த இடத்தை பார்வையிட்டபோது, அங்கு சீன பீங்கான், பானை ஓடுகள்,இரும்புத்தாது, சிவப்பு பானை ஓடுகள் இருப்பதை கண்டதாக தெரிவித்தார்.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மனிதன் கையில் பூவுடன் நிற்கிறார். அவரது இடதுபுறத்தில் நான்கு வட்டங்கள் உள்ளன. அவருக்கு மேலே ஒரு பிறை உள்ளது. வலதுபுறம் திரிசூலமும் தீபமும் உள்ளது.

நாணயத்தின் மறுபுறம், கையில் சங்கு ஏந்தியபடி ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

‘ஸ்ரீராஜராஜா’ என்ற பெயர் தேவநாகரி எழுத்துக்களில் அவரது இடது கைக்கு அருகில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகள் தேய்ந்துவிட்டன.

முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றியதன் நினைவாக ஈழத்து நாணயங்கள் தங்கம்இ வெள்ளி மற்றும் செம்புகளில் வெளியிடப்பட்டதாக வி.ராஜகுரு கூறினார்.

இலங்கையில் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் சோழர்கள் ஆண்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.