ஹிஸ்புல்லா நஸ்ரல்லா – ஹமாஸ் ஹனியே… துல்லியமாக அழிக்கப்பட்ட இஸ்ரேலின் எதிரிகள்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட இரு மாதங்களின் பின்னர், பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளார்.
இனிவரும் நாட்கள் மத்திய கிழக்கில் மிக தீர்க்கமான நாட்களாக அமைய உள்ளன.
பாலஸ்தீன, ஹிஸ்புல்லா தலைமைகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகளும், உளவு அமைப்பு மொசாட்டும் மிகத்தீவிரமாக தற்போது வேட்டையாடத் தொடங்கி உள்ளன)
சமீபத்திய ஆண்டுகளில் மத்திய கிழக்கில் பல ஹமாஸ் , ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதில்லை.
இஸ்ரேலின் இலக்கு ஹசன் நஸ்ரல்லா :
ஷேக் ஹசன் நஸ்ரல்லா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஹிஸ்புல்லாவிற்கு தலைமை தாங்கி, மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த போராளிக் குழுவை வழிநடத்திய தலைவராவார்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான ஹரேக் ஹ்ரீக்கில் வெள்ளிக்கிழமை ஆறு கட்டிடங்களை முழுமையாக அழித்தன. இது இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு வருட மோதலின் போது லெபனான் தலைநகரில் நடந்த மிக முக்கியமான, கடுமையான தாக்குதலாகும்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இலக்காக வைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை(27/9/24) பாரிய வான் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் இறப்புகள் ஏற்பட்டன. மற்றும் பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.
ஈரானில் ஹமாஸ் தலைவர் கொலை:
ஜூலை மாத இறுதியில் ஈரானில் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவரது மெய்ப்பாதுகாவலருடன் தெஹ்ரான் இல்லத்தில் குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பாலஸ்தீன, ஹிஸ்புல்லா உறுப்புனரகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகளும், உளவு அமைப்பு மொசாட்டும் மிகத்தீவிரமாக தற்போது வேட்டையாடத் தொடங்கி உள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை ஐம்பது ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றது.
இந்த போரின் நடுவிலும், குறிப்பாக பாலஸ்தீன- ஹிஸ்புல்லா உறுப்பினரகளைக் குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜூலை இறுதியில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Hamas’ top political leader Ismail Haniyeh) கொல்லப்பட்டார்.
ஈரானின் புதிய அதிபராக தேர்வான மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்த வேளையிலேயே இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஹிஸ்புல்லா தலைவர் பலி:
நீண்ட காலமாக இஸ்ரேலிய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் இரு முக்கிய ஹிஸ்புல்லா தலைவர்களுடன் பெய்ரூட்டில் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் மத்திய தலைமையகத்திற்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்தின. இலக்கு தவறாத தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
அத்துடன் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஏவுகணைப் பிரிவின் தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் அவரது துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் துல்லியமான தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.
அலி இஸ்மாயில் பல தாக்குதல்களை இயக்கியதற்கும், இஸ்ரேலிய எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை வீசியதற்கும், மத்திய இஸ்ரேலை நோக்கி தரையிலிருந்து மேற்பரப்புக்கு ஏவுகணையை செலுத்துவதற்கும் பொறுப்பானவர் என்று இஸ்ரேல் கூறியது.
ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் படையின் தலைவரான இப்ராஹிம் முஹம்மது கபிசி மற்றும் இந்தப் பிரிவின் மற்ற மூத்த தளபதிகள் முன்பு கொல்லப்பட்டதை அடுத்து, தற்போது முக்கிய இரண்டு தலைவர்களை ஒழித்ததாக இஸ்ரேலின் அறிவிப்பு வந்துள்ளது.
லெபனான் அரசியலில் சக்தி வாய்ந்தவர்:
மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான, மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான ஷேக் ஹசன் நஸ்ரல்லாஹ் இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக நஸ்ரல்லா பல ஆண்டுகளாக பொது வெளியில் அவர் காணப்படவில்லை.
ஹிஸ்புல்லாவை அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக மாற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் குழுவின் ஆதரவாளர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். தற்போது இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் நஸ்ரல்லாவைக் கொன்றதாகக் கூறியுள்ளது.
லெபனானின் போர்க்குணமிக்க ஷியா இஸ்லாமிய ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவரான ஷேக் ஹசன் நஸ்ரல்லா,
ஈரானுடன் நெருக்கமான தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்ட ஒரு நிழலான நபர். நஸ்ரல்லாவின் தலைமையின் கீழ், ஹிஸ்புல்லா பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக் மற்றும் யேமனில் உள்ள போராளிகளுக்கு ஈரான் பயிற்சி அளித்தது.
லெபனானை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய துருப்புக்களை எதிர்த்துப் போராடுவதற்காக நிறுவப்பட்ட ஹிஸ்புல்லாவின் பரிணாமத்தை அவர் லெபனான் இராணுவத்தை விட வலிமையான இராணுவப் படையாக மாற்றினார். இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்த ஈரானிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் ஹிஸ்புல்லா ஆயுதங்கள் ரொக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைப் பெற்று வந்துள்ளது. நீண்ட காலமாக நசரல்லா லெபனான் அரசியலில் ஒரு சக்தி வாய்ந்தவராக விளங்கினார்.
மொசாட்டின் தப்பாத குறி:
சமீபத்திய ஆண்டுகளில் பல ஹமாஸ் , ஹிஸ்புல்லா உயர்மட்டத்தினர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2004 இல், இஸ்ரேல் காஸாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி, அப்போது ஹமாஸின் தலைவர் அப்தெல் அஜிஸ் ரந்திசி கொன்றது. அதே ஆண்டு, காசா நகரில் ஹமாஸ் போராளிக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான அகமது யாசினையும் படுகொலை செய்தது.
ஈரானில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட இரு மாதங்களின் பின்னர், இஸ்ரேலிய படைகள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி ஷேக் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றதாக தெரிவித்துள்ளது.
மரணத்தை உறுதிப்படுத்திய ஹிஸ்புல்லா:
அண்மையில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வோக்கி டோக்கி கைபேசிகளை வெடிக்கச் செய்து இஸ்ரேல் 39 பேரைக் கொன்றதுடன், ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது.
கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதல்களை பாரியளவில்்அதிகரித்தது. கிட்டத்தட்ட 800 போராளிகளைக் கொன்றது. வான் வெளி குண்டுவெடிப்புகளால் ஆயிரக்கணக்கான போராளிகள் காயமடைந்தனர்.
அதைத் தெடார்ந்து நசரல்லாவின் கீழ் இயங்கிய ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதிகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டனர்.
இறுதியாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஹசன் நசரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்த இறப்பை நீண்ட நேரம் உறுதிப்படுத்தாத ஹிஸ்புல்லா தற்போது அவரின் இறப்பை உறுதி செய்துள்ளது. இனிவரும் நாட்கள் மத்திய கிழக்கில் மிக தீர்க்கமான நாட்களாக அமைய உள்ளன.