அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்!
அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடரும்.
இதன்படி, புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 9ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் சாகர காரியவசம் மற்றும் மூன்று சிவில் உறுப்பின்ர்கள் அரசியலமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.
இதேவேளை, நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் பதவி வெற்றிடமாக உள்ளது.
அந்த பதவியில் கடமையாற்றிய பிரதீப் யசரத்ன நாளை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதையடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், 17 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்ட போதும், கடந்த அரசாங்கத்தில் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளராக கடமையாற்றிய பிரதீப் யசரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை பிரதீப் யசரத்ன செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளதால் குறித்த பதவியை விட்டு விலக தீர்மானித்ததாக பிரதீப் யசரத்னவிடம் வினவிய போது குறிப்பிட்டுள்ளார்.