இலங்கை

இருகரம் நீட்டி அழைக்கும் தமிழரசுக்கட்சி!

தமிழ்மக்களின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத்தேர்தலில் வடகிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

விசேடமாக ஜனாதிபதித்தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த மூன்று தீர்மானங்களுக்கு மாறாக செயற்ப்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் ப.அரியநேத்திரனை கட்சியில் இருந்து விலக்குமாறு பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் சிலவிடயங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கத்தினை கேட்டுவிட்டு தீர்மானங்களை எடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்மக்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இன்று விசேடமான அறிவிப்பு ஒன்றை மனம் உவந்து விடுக்கின்றோம். தமிழ்த்தேசியப்பரப்பிலே இருக்கின்ற விசேடமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிச்சென்ற கட்சிகளை மீண்டும் எங்களுடன் இணைந்து தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டும் என்று வினயமாக ஒரு அறிவிப்பு விடுக்கின்றோம். சவால்மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கிவந்து இந்த தேர்தலுக்கு முகம் கொடுக்குமாறு இருகரம் நீட்டி, அழைக்கின்றோம்.

அந்தவகையில் தமிழரசுக்கட்சியின் பெயரிலும் அதன் சின்னத்திலும் தான் நாங்கள் கடந்தகாலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். அவ்வாறே இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம். அந்த அழைப்பை ஏற்று வந்தால் மிகவிரைவாக நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் வேட்பாளர்களை நிறுத்தும் விடயங்களை இணைந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அடுத்துவரும் ஒருசில நாட்களில் அவர்களின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

அவ்வாறு இணங்கி வராவிட்டால் தமிழரசுக்கட்சி தனித்தும் போட்டியிடும். அத்துடன் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் விசேட கரிசனை ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. ஒரு உறுப்பினரே அங்கு தெரிவுசெய்யப்படும் சூழ்நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்ததந்த மாவட்டக்கிளைகளோடு பேசி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வரலாம் என தீர்மானித்திருக்கின்றோம்.

அத்துடன் இந்த தேர்தலில் வடகிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்வதாக எமது மத்திய குழு தீர்மானித்துள்ளது.

தமிழ் பொதுக்கட்டமைப்பிடம் இருந்து இதுவரை எந்தவித அழைப்புகளும் வரவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ்க்கட்சி. இதுவரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக வேறு பலகட்சிகளுடன் இணைந்து செயற்ப்பட்டபோதும் எமது சின்னத்திலும் பெயரிலேயுமே தேர்தலில் போட்டியிட்டோம், அந்தவகையில் பிரதானகட்சி என்ற வகையிலேயே இந்த அழைப்பை விடுக்கின்றோம்.

வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக சரியான அணுகலை நாங்கள் மேற்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களிடத்தில் பாரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. தேசியமக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு பல்வேறு எண்ணப்பாடுகள் கூடியிருக்கின்றது. அது நல்ல விடயம். எனவே இளைஞர்கள் ஆற்றல் உள்ளவர்கள் படித்தவர்கள் பெண்கள் என்றுஅவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையிலேயே வேட்பாளர் தெரிவு இடம்பெறும்.

அதனை ஆராய்வதற்காக நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த குழு இறுதி முடிவுகளை எடுக்கும் மாவட்ட ரீதியாக கலந்தாலோசித்து அந்த முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.