வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளின் கும்பல்களிற்கு உடனடியாக நாடு திரும்புமாறு அழைப்பு
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் இருக்கும் அரசியல்வாதிகளின் மகன்,மகள்,மச்சினன்,மருமகள் கும்பல்களிற்கு உடனடியாக நாடு திரும்புமாறு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது.Foregin Service எக்ஸாம் எழுதுவது எப்படிப் போனாலும், அதுபற்றி என்னவென்று தெரியாமலயே அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் அல்லக்கைகளாக இருந்ததற்காக வழங்கப்பட்ட இத்தகு உத்தியோகங்கள், வரப்பிரசாதங்கள் மூலம் இலங்கை வருடத்திற்கு பல லட்சம் டொலர்களை இழந்தது.
ஒருநாட்டிற்குள் நுழைய முன்பே அந்நாடு எப்பேர்பட்டது என்ற விம்பத்தை விமான நிலையங்கள் தந்துவிடும். VFS GLOBAL என்ற இந்தியக் குடுகுப்பை கம்பெனிக்கு ON ARRIVAL வீஸாக்களை வழங்க முன்னாள் அமைச்சரும் பிரபல டீலருமான டிரான் அலஸ் கெபினட் தீர்மானம் என்ற பெயரில் பணித்த பிறகு வரிசைகளால் நீண்டது எமிக்ரேஷன்.முன்னர் வீஸாவுக்கு ஐம்பது டொலரும், சேவைக் கட்டணமாக 1.25 டொலருமாய் 51.25 டொலரை ONLINE இல் செலுத்திவிட்டு எந்தவிதச் சிரமுமில்லாமல் எமிக்ரேஷனைத் தாண்டிச் சென்ற வெளிநாட்டவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
வீ.எப்.எஸ் கும்பலுக்கு வீஸா கட்டணம் என்ற பெயரில் 25.77 உடன் சேர்த்து மொத்தம் 75.77 டொலரை ஒரு வெளிநாட்டவர் செலுத்த வேண்டி இருந்தது. இதனால் இந்தியக் கம்பெனியிடம் இலங்கை இழந்த தொகை மட்டும் 1.4 பில்லியன் டொலர்கள். ஏப்ரல் முதல் தொடர்ந்த இந்த அவலம், எதிர்க்கட்சி நீதிமன்றப் படி ஏறிய போது இடைக்காலத் தடைக்குள்ளானது.ஜனாதிபதி அநுரகுமார மொத்தமாய் வீ.எப்.எஸ் ஐ முந்தநாள் துரத்திவிட்டார்.
முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு கோரப்பட்டிருக்கிறார்கள்.முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பிடுங்குவதற்கு பாரளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை ஒன்றும் செய்யமுடியாது.மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் தவிர அத்தனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொலிஸாரும் லீட்டர் கணக்கான எரிபொருளும் மிச்சப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஜனாதிபதிகளுக்கு என்று ஆலோசகர்கள் பெயரில் நூற்றுக் கணக்கான நபர்கள் முன்னரெல்லாம் இருந்தார்கள். இவர்கள் அத்தனை பேரினதும் சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் முதல் ஆளுநர்கள் வரை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நியமனங்கள் முழுக்க படிப்பு வாசனை தெரிகிறது. எந்தவொரு பதவியிலும் குற்றநிழல் படிந்தவர்கள் இல்லை.
ஊழல் மாபியாக்கள் மற்றும் ஈஸ்டர் சூத்திரதாரிகளுக்கு எதிரான நீதி விசாரணை தொடரும் என்று திரும்பவும் அழுத்தமாய் சொல்லப்பட்டு இருக்கிறது.
நிமல் சிரிபால டீ சில்வா லஞ்சம் கோரியதால் நிறுத்திவைக்கப்பட்ட விமான நிலைய டெர்மினல் அமைப்புப் பணிகள் உட்பட இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினொரு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
நம்பிக்கை தரும் நகர்வுகள் தான். வெறும் மூன்று அமைச்சர்களுடன் வெற்றிகரமான முதலாவது வாரம் தான். ஆனால் தன் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.கொழும்பில் இருந்து கண்டிக்கு காரில் சென்றிருக்கிறார் அநுர.பாவிப்பதற்கு ஹெலிகாப்டர்கள் இருக்கும் போது நான்கு மணித்தியாலங்கள் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டு காரில் செல்வது நேர விரயம். எளிமை என்பது வேறு.பாதுகாப்பு என்பது வேறு.