முச்சந்தி
ஹிஸ்புல்லா தலைவர் – ஷேக் ஹசன் நஸ்ரல்லா; இஸ்ரேலின் அதி முக்கிய இலக்கில் பலி ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இலக்காக வைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை(27/9/24) பாரிய வான் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆயினும் பெய்ரூட் கள ஊடக அறிக்கைகளின் படி நஸ்ரல்லா (Hassan Nasrallah) இன்னமும் உயிருடன் இருப்பதாக ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய ஒரு வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி தெஹ்ரான் அவரது நிலையை சரிபார்த்து வருவதாகவும் கூறினார்.
இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் இறப்புகள் ஏற்பட்டன. மற்றும் பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான ஹரேக் ஹ்ரீக்கில் வெள்ளிக்கிழமை ஆறு கட்டிடங்களை முழுமையாக அழித்தன. இது இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு வருட மோதலின் போது லெபனான் தலைநகரில் நடந்த மிக முக்கியமான கடுமையான தாக்குதலாகும்.
யார் – ஹசன் நஸ்ரல்லா ?
ஷேக் ஹசன் நஸ்ரல்லா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஹிஸ்புல்லாவிற்கு தலைமை தாங்கி, மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த போராளிக் குழுவை வழிநடத்தும் தலைவராவார்.
1960 இல் போராடும் ஷியா குடும்பத்தில் பிறந்த அவர், இறையியல் படிப்பைத் தொடர்ந்தார். ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவராக வெளிப்படுவதற்கு முன்பு, ஷியா அரசியல் மற்றும் துணை ராணுவ அமைப்பான அமல் இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்.
1985 ஆம் ஆண்டில், ஹிஸ்புல்லா அமெரிக்காவையும் – சோவியத் யூனியனையும் இஸ்லாத்தின் முக்கிய எதிரிகள் என்று பெயரிட்ட ஒரு “திறந்த கடிதத்தை” வெளியிட்டதன் மூலம் அதன் உருவாக்கத்தை முறையாக அறிவித்தார்.
முஸ்லீம் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதாக குற்றம் சாட்டிய இஸ்ரேலை “அழிக்கப்பட வேண்டும்” என்றும் அந்த கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டதும் முக்கியமானதாகும்.
நஸ்ரல்லா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1997-ல் ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.
இஸ்ரேலின் பரம எதிரி :
ஹசன் நஸ்ரல்லா சுமார் மூன்று தசாப்தங்களாக ஹிஸ்புல்லாவின் தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். 64 வயதான அவரது தலைமையின் கீழ், ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட காலமாக போரிட்டு வருகிறது.
அயல் நாடான சிரியாவில் நடந்த மோதலிலும் பங்கேற்றார். சிரிய ஜனாதிபதி பஷர் அசாத்திற்கு ஆதரவாக , அவரின் அதிகார சமநிலையை உயர்த்த வலுவாக உதவினார்.
1982 கோடையில் லெபனானுக்கு படையெடுத்த இஸ்ரேலியப் படைகளை எதிர்த்துப் போராட வந்த ஈரானிய புரட்சிக் காவலர்களுடன், ஹிஸ்புல்லா துணையாக நிறுவப்பட்டது. இதன் பின்னரே நஸ்ரல்லா – ஹிஸ்புல்லா இஸ்ரேலின் பரம எதிரியாக மாறியது.
2000 ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டு, 18 ஆண்டுகால ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்த போரில் நஸ்ரல்லாவின் தலைமையின் கீழ், ஹிஸ்புல்லா முக்கிய பங்கு வகித்தது.
இதன் பின்னர் 2006 இல், ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் 34 நாள் மோதலில் ஈடுபட்டது. அது ஒரு போர் நிறுத்தமாக முடிந்தது. அதை அவர் “தெய்வீக வெற்றி” என்று அறிவித்தார்.
நஸ்ரல்லாவின் பாலஸ்தீன ஆதரவு:
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்த பிறகு, ஹிஸ்புல்லா எல்லையில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியது.
காசா மோதல் தீவிரமான காலத்தில் ஹிஸ்புல்லா குழுவினர் எல்லை தாண்டிய தாக்குதல்களால் இஸ்ரேலியப் படைகளைத் திசைதிருப்பின. இல்லையெனில் காசாவில் ஹமாஸ் மீது கவனம் செலுத்தப்பட்டு இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பாலஸ்தீன பிராந்தியத்தில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை ஹிஸ்புல்லா தனது தாக்குதல்களை நிறுத்தாது என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய வாரங்களில் லெபனானில் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், ஹிஸ்புல்லாவை எல்லையில் இருந்து பின்னுக்குத் தள்ளும் நோக்கில் மோதலில் ஒரு புதிய கட்டத்தை இஸ்ரேல் ஆரம்பித்தது. வடக்கு இஸ்ரேலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
தற்போது இஸ்ரேல் தாக்குதலில் உயர்மட்ட ஹிஸ்புல்லா இராணுவத் தளபதிகளின் மரணத்திற்கு வழிவகுத்தது என்றும், இக்குழுவால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் உட்பட பல தகவல் தொடர்பு சாதனங்கள் அழிக்கப்பட்டன. இதன் போது 37 இறப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கானோரின் காயங்களுக்கும் வழிவகுத்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு, ஹிஸ்புல்லா, அதன் எல்லையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகளைத் தாக்கத் தொடங்கியது. காசாவுக்கு ஆதரவாகவே தாக்குதலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஹிஸ்புல்லா தலைவர் பலி:
இஸ்ரேலிய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தலைவரின் தலைவிதி இதுவரை தெரியவில்லை. ஆயினும் இரு முக்கிய ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்பட்டது.
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் மத்திய தலைமையகத்திற்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய “இலக்கு தாக்குதலை” தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.
தாக்குதலின் இலக்கு நஸ்ரல்லா என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் தாக்குதலைத் தொடர்ந்து அவர் “நன்றாக இருக்கிறார்” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது. அதேவேளை
தமது மாண்புமிகு செயலாளர் நாயகம் நலமாக உள்ளார், அவர் இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் இல்லை, என்று ஹிஸ்புல்லாஹ் ஊடக தொடர்பு அதிகாரி ஹஜ் முஹம்மத் அஃபிஃப் தெரிவித்தார்.
அத்துடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நஸ்ரல்லாவின் தற்போதய நிலை குறித்த அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை இன்னமும் வழங்கவில்லை.
தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஏவுகணைப் பிரிவின் தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் அவரது துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் துல்லியமான தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.
அலி இஸ்மாயில் பல பயங்கரவாத தாக்குதல்களை இயக்கியதற்கும், இஸ்ரேலிய எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை வீசியதற்கும், மத்திய இஸ்ரேலை நோக்கி தரையிலிருந்து மேற்பரப்புக்கு ஏவுகணையை செலுத்துவதற்கும் பொறுப்பானவர் என்று இஸ்ரேல் கூறியது.
ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் படையின் தலைவரான இப்ராஹிம் முஹம்மது கபிசி மற்றும் இந்தப் பிரிவின் மற்ற மூத்த தளபதிகள் முன்பு கொல்லப்பட்டதை அடுத்து, தற்போது முக்கிய இரண்டு தலைவர்களை ஒழித்ததாக IDF இன் அறிவிப்பு வந்துள்ளது.