காசாவை தொடர்ந்து பெய்ரூட்!… லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு !!… – ஐங்கரன் விக்கினேஸ்வரா
தொடர்ந்து யுத்தகளமாக இருக்கும் ஹிஸ்புல்லா – இஸ்ரேல் மோதலின் வரலாற்றுப் பார்வையாக இந்த ஆக்கம் அலசுகிறது.
23/9/24 அன்று லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 500 பேர் பலியானதுடன், பல ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதுவரை கால தாக்குதலில் பெருந்தொகையானோர் கொல்லப்பட்டமை இதுவே கூடியதாகும்.
உயிரிழந்தவர்களில் பல சிறுவர்கள் உள்ளனர் என லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து விமான தாக்குதலை மேற்கொள்கின்றது. பொது மக்கள் அங்கிருந்து தப்பியோடுகின்றனர் என தகவல்கள் தெரிவித்துள்ளது.
இதேவேளை தென் லெபனானிலும் பெக்கா பிராந்தியத்திலும் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் 800 இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
திணறடித்த பேஜர் தாக்குதல்:
ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்கள் மீதான பேஜர் தாக்குதல் பல தசாப்தங்களாக நீடித்த போரில் சமீபத்திய பெருஞ் சவாலாக ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு ஏற்பட்டது.
லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜிங் சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்ததை அடுத்து, லெபனானில் சுமார் 2,800 பேர் அவர்களது பேஜர் சாதனங்கள் வெடித்ததில் காயமடைந்தனர். குறைந்தது நாற்பது பேர் கொல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் லெபனான் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்தவர்கள்.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதே தாக்குதலைக் குற்றம் சாட்டியது.
குறைந்தது 45000 பேரைக் கொன்ற காசா மீதான போரில் இருந்து அக்டோபர் 8 முதல், இஸ்ரேலை திசை திருப்பும் வண்ணம், அதன் தாக்குதல்களைத் தொடங்கிய ஹிஸ்புல்லா கிட்டத்தட்ட ஒரு வருடமாக இஸ்ரேலுடனான தெற்கு லெபனான் எல்லையில் தாக்குதல்களை செய்து வருகிறது.
தொடர்ந்து யுத்தகளமாக இருக்கும் ஹிஸ்புல்லா – இஸ்ரேல் மோதலின் வரலாற்றுப் பார்வையாக இந்த ஆக்கம் அலசுகிறது.
1982 லெபனான் படையெடுப்பு:
தெற்கு லெபனானில் இருந்து பாலஸ்தீன விடுதலை அமைப்பு அதன் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஜூன் 1982 இல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது. அதன் பின்னர் லெபனானில் உள்நாட்டுப் போர் ஏழு ஆண்டுகளாக நடந்தது.
லெபனானில் ஒரு நட்பு அரசாங்கத்தை நிறுவும் நம்பிக்கையில், இஸ்ரேல் தெற்கே ஆக்கிரமித்து மேற்கு பெய்ரூட் வரை சென்றது. அங்கு PLO தளமாக இருந்து செயற்பட்டமையால், அது முற்றுகைக்கு உட்பட்டது.
நீண்ட கால உடன்பாட்டிற்குப் பிறகு, PLO துனிசியாவிற்கு தலைமையகத்தை எடுத்து சென்றது. ஆனால் இஸ்ரேலின் இராணுவம் லெபனானில் தங்கியிருந்து, உள்நாட்டுப் போரில் உள்ளூர் பினாமிகளை தொடர்ந்து ஆதரித்தது.
அத்துடன் சப்ரா மற்றும் ஷட்டிலா அகதிகள் படுகொலைக்கு இஸ்ரேல் பங்களித்தது. வலதுசாரி லெபனான் துணைப்படை ஆயுததாரிகள், இஸ்ரேலிய இராணுவத்துடன் ஒருங்கிணைந்து, இரண்டு நாட்களில் 2,000 முதல் 3,500 பாலஸ்தீனிய அகதிகள் மற்றும் லெபனான் குடிமக்களைக் கொன்றனர்.
இதன் பின் இஸ்ரேலின் படையெடுப்பை முறியடிக்க பல லெபனான் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஷியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பாரம்பரியமாக மக்கள் குழுவாகும்.
மற்றயது ஹிஸ்புல்லா அமைப்பு அடிப்படைவாத முஸ்லீம் தலைவர்களின் சிந்தனையில் உருவானது. ஆரம்பத்தில் இருந்தே ஈரானால் ஆதரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலை விரட்டுவதற்கான ஆணையைப் பெற்றது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் அதிருப்தியடைந்த இளைஞர்கள் பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின் ஆதரவைப் பெற்றனர். குறிப்பிடத்தக்க ஷியா மக்கள்தொகை கொண்ட ஓரங்கட்டப்பட்ட பகுதிகள் ஹிஸ்புல்லா விரைவில் லெபனானில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக மாற வழிவகுத்தது.
1983 தாக்குதல்கள்:
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக 1982 மற்றும் 1986 க்கு இடையில், வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான பல தாக்குதல்கள் பல்வேறு குழுக்களால் நிறைவேற்றப்பட்டு உரிமை கோரப்பட்டன. ஆனால் பல ஹிஸ்புல்லா மீது குற்றம் சாட்டப்பட்டன.
அக்டோபர் 23, 1983 அன்று, தலைநகர் பெய்ரூட்டில் பல படைமுகாம் கட்டிடங்கள் மீது குண்டுவீசி 300 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு மற்றும் அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்.
இக் குண்டுவெடிப்பு இஸ்லாமிய ஜிஹாத் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. இது ஹிஸ்புல்லாவின் முன்னணி என்று பலரால் நம்பப்படுகிறது.
1985இல் ஹிஸ்புல்லாவின் வளர்ச்சி:
1985இல், ஹிஸ்புல்லா போரிடும் தீவிரமான சக்தியாக வளர்ந்தது. அது பல நேச குழுக்களுடன் சேர்ந்து, தெற்கு லெபனானில் உள்ள லிட்டானி நதிக்கு இஸ்ரேலிய இராணுவத்தை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்த முடிந்தது.
இதன்பின்னர், லெபனான்-இஸ்ரேல் எல்லையில் “பாதுகாப்பு மண்டலம்” என்று அழைக்கப்பட்டதை இஸ்ரேல் அறிவித்தது.
பாதுகாப்பு வலயம் என்பது கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தெற்கு லெபனான் இராணுவம் (SLA)வலுவான பகுதியாகும்.
இப்பகுதி பொதுவாக இஸ்ரேலிய ப்ராக்ஸி படையாக அறிவிக்கப்பட்டது. இது 2000 இல் இஸ்ரேல் வெளியேறும் வரை தெற்கு லெபனானின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஆதரித்தது.
1992 அரசியல் வளர்ச்சி:
1992 இல், லெபனானின் உள்நாட்டுப் போர் (1975-1992) முடிவடைந்த பின்னர், லெபனானின் 128 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் எட்டு இடங்களை வென்ற ஹெஸ்பொல்லா நாடாளுமன்ற அரசியலில் நுழைந்தது.
இதன்பின்னர் ஹிஸ்புல்லாவின் ஆசனங்கள் அதிகரித்தன. தற்போது அதன் கூட்டாளிகளும் இணைந்து இப்போது பாராளுமன்றத்தில் 62 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.
அதன் இருப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அதன் செல்வாக்கை அதிகரித்து, விரிவான சமூக நிகழ்ச்சிகளையும் நடாத்தி வருகின்றனர்.
1993 – ஏழு நாள் போர்:
ஜூலை 1993 இல், லெபனானில் ஏழு நாள் போர் என்றுஅழைக்கப்படும் “ஆபரேஷன் அக்கவுன்டபிலிட்டி” என்று அழைக்கப்பட்டு லெபனானை இஸ்ரேல் தாக்கியது.
இந்த மோதலில் 118 லெபனான் குடிமக்கள்கொல்லப்பட்டனர் மற்றும் 500 பேர் காயமடைந்தனர், மேலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.
1996 ஏப்ரல் ஆக்கிரமிப்பு:
ஏப்ரல் 11, 1996 அன்று, லிட்டானி ஆற்றுக்கு அப்பால் ஹிஸ்புல்லாவை கட்டாயப்படுத்தி துரத்தவும், இஸ்ரேலிய இலக்குகளின் மீதான தாக்குதலைத் தடுக்கவும் இஸ்ரேல் மற்றொரு 17 நாள் தாக்குதலைத் தொடங்கியது.
லெபனானியர்கள் ஏப்ரல் ஆக்கிரமிப்பை, இஸ்ரேலால் “ஆபரேஷன் கிரேப்ஸ் ஆஃப் ரேத்” என்று அழைக்கப்படுகிறது. இது 1939 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டெய்ன்பெக்கின் நாவலைக் குறிக்கிறது.
போரின் விளைவால் இரு தரப்பிலும் குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டன மற்றும் லெபனானின் உள்கட்டமைப்பு மோசமாக சேதமடைந்தது.
1996 ஏப்ரல் 18 அன்று, ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு லெபனானில் உள்ள கானா கிராமத்திற்கு அருகில் உள்ள ஐக்கிய நாடுகளின் வளாகத்தின் மீது இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியது. சுமார் 800 இடம்பெயர்ந்த பொதுமக்கள் அங்கு தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலில் குறைந்தது 37 குழந்தைகள் உட்பட 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 116 பேர் காயமடைந்தனர்.
2006 இல் ஜூலை போர்:
2006 ஆம் ஆண்டு இஸ்ரேலிய எல்லைக்குள் ஒரு நடந்த தாக்குதலால் ஹிஸ்புல்லா மூன்று இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். வாசிம் நசல், இயல் பெனின் மற்றும் ஷானி துர்கேமன், மேலும் இருவரான எஹுட் “உடி” கோல்ட்வாசர் மற்றும் எல்டாட் ரெகேவ் ஆகியோரை உயிருடன் கைப்பற்றினர்.
இஸ்ரேலிய வீரர்களுக்கு ஈடாக லெபனான் கைதிகளை விடுவிக்குமாறு ஹிஸ்புல்லா கோரியது. இறுதியில், ஐந்து லெபனான் கைதிகளுக்கு ஈடாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோல்ட்வாஸர் மற்றும் ரெகேவ் இருவரின் உடல்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டன.
இப்போரில் ஏறக்குறைய 1,200 லெபனான் மக்கள் இறந்தனர்,4,400 பேர் காயமடைந்தனர், பெரும்பாலும் பொதுமக்கள் ஆவார்கள். இஸ்ரேல் 158 போர் வீரர்களின் இறப்புகளைப் பதிவுசெய்தது.
தொடரும் மோதல்களால் தற்போது வடக்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 60,000 இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டனர். இரு தரப்பு மக்களும் இன்னும் மீள திரும்பவில்லை. செப்டம்பர் 17, 2024 அன்று, லெபனானில் ஹெஸ்பொல்லா இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கையடக்க பேஜர்கள் வெடித்தன. அதன் பின்னர் போர் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.