பாடும் நிலா எமை விட்டு பிரிந்து 4 ஆண்டுகள் நிறைவு
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வவேன் என கீதத்தில் நாதமாய் வாழும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்ற பாடும் நிலாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1946 ஆம் ஆண்டு 4 ஜீன் அன்று தெலுங்குக் குடும்பத்தை சேர்ந்த, எஸ். பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்த இவருக்கு சிறு வயது முதலே இசை மீதான காதல் எழுந்து விட்டது.
இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான இவர் எஸ்.பி.பி. என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்று செல்லமாகவும் அழைக்கப்பட்டவராவார்.
இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
இவரது முதலாவது தமிழ் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் எல். ஆர். ஈஸ்வரியுடன் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்துக்காகப் பாடிய “அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு” என்பதாகும். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969 இல் சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலை ஜெமினி கணேசனுக்காகப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆருக்காக அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது. இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.
எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார்.
மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.
இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார். எம்.எஸ் .விஸ்வநாதன் , இளையராஜா, தேவா , கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் , வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், முதல் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் வரை அனைவரின் இசையிலும் பாடியுள்ளார்.
பாடல்கள் மட்டுமன்றி பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையையும் வெளிக்காட்ட தவறியதில்லை. நடிகர்களுக்கு பிண்ணனி குரல் கொடுத்தும் சாதனை படைத்துள்ளார்.
இவர் பாடிய மண்ணில் இந்த காதல் இன்றி , மன்றம் வந்த தென்றலுக்கு , சங்கீத மேகம், என் காதலே , காதல் ரோஜாவே, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை , அண்ணாமலை அண்ணாமலை , யம்மா யம்மா காதல் பொன்னம்மா , அண்ணாத்த , எங்கேயும் எப்போதும் , சும்மா கிழி போன்ற பாடல்கள் எம்மை மனதை விட்டு நீங்காது காதோரமாய் அவர் பேர் சொல்லி செல்லும்.
உலகையே உலுக்கிய கொரேனா இவரையும் எம்மில் இருந்து பிரித்து சென்று விட்டது. பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கெொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறைபதம் அடைந்தார். உடல் பிரிந்தாலும் குரலால் எமை அணைக்கும் அவர் இசை உள்ள வரை வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.