1830 இல் நீராவி ரயில் என்ஜின் தோற்றுப் போனது…
நீராவி ரயில் என்ஜினின் சக்தியை நிரூபிக்க, குதிரையோடு நடத்தப்பட்ட போட்டியில் என்ஜின் தோற்றுப் போனது. அமெரிக்காவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் நீராவி என்ஜினான டாம் தம்ப் என்பதன் திறனை நிரூபிக்க 13 மைல் தூரத்துக்கு இப்போட்டி நடத்தப்பட்டது.
அக்காலத்தில் சரக்குகளைக் கொண்டு செல்ல தேசியச் சாலை முக்கியமான வழியாக இருந்ததால் பால்டிமோர் நகருக்கு முக்கியத்துவம் உருவாகியிருந்தது. நியூயார்க் நகரை பேரேரிகளுடன் இணைத்த எரீ கால்வாய் திறக்கப்பட்டவுடன், இந்நகரின் முக்கியத்துவம் குறைந்தது. இதனால், நகரை நிர்மாணித்தவர்கள் இந்நகர் வழியாக ரயில் பாதை உருவாக்கி, தங்கள் நகரின் வழியாக மலிவான சரக்குப்போக்குவரத்து வழியைத் தரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அக்காலத்தில், சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களின் சக்கரங்களில், தண்டவாளத்தில் செல்லத்தக்க மாற்றங்கள் செய்து, குதிரையால் இழுத்துச் செல்லும் பழக்கமே இருந்தது. 1825ல் இங்கிலாந்தில் நீராவி என்ஜின் புழக்கத்துக்கு வந்து, அமெரிக்காவிலும் ஒன்றிரண்டு என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டும் விட்டன. ஆனால், தங்கள் சொந்தத் தயாரிப்பான என்ஜின் வேண்டும் என்று அமெரிக்கர்கள் விரும்பினர். பீட்டர் கூப்பர் என்பவர், செங்குத்தான கொதிகலனுடன், 4 சக்கரங்களைக் கொண்ட ஒரு சிறிய என்ஜினை உருவாக்கினார்.
அப்பகுதியில் இவர் நிறைய நிலம் வாங்கியிருந்ததாகவும், அவற்றின் மதிப்பு உயர்வதற்காகவே இம்முயற்சியில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், குதிரைகளை வைத்து வண்டிகளை இயக்கிவந்த ‘பால்டிமோர் ஒகையோ ரயில்பாதை நிறுவனம்’ இந்த என்ஜினின்மீது ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே அருகருகே இரு தண்டவாளங்கள் அமைத்து நடத்தப்பட்ட இப்போட்டியில், என்ஜினின் பெல்ட் கழன்றதால் குதிரை வண்டி முதலில் சென்று வெற்றிபெற்றது.
ஆனால், என்ஜினின் வேகத்தைப் புரிந்துகொண்டு, பயன்படுத்தத் துவங்கிய ரயில்பாதை நிறுவனம், 1831 ஜூலை 31 அன்று குதிரைகள் இழுக்கும் வண்டிகளை முழுமையாகக் கைவிட்டது.