6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!
பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக உள்ளனர். கணவன், குடும்பம் மற்றும் சமூகம் என அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர்.
பெண்கள் நலம் சார்ந்து இந்திய கர்நாடக அரசு ஒரு புதிய கொள்கையை வகுத்துள்ளது. இதற்காக 18 பேர் கொண்ட குழு அதன் அறிக்கையை வழங்கியுள்ளது.
அதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்குமாறு பரிந்துரை செய்யப்படுள்ளது.
கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகு அதன் அடிப்படையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
நாட்டில் தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் மட்டுமே பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. கேரளாவில் பெண் ஊழியர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில், ஜப்பான், தென்கொரியா, ஸ்பெயின், பிலிப்பீன்ஸ், தைவான், ஸாம்பியா, வியட்னாம் போன்ற நாடுகள் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குகின்றன.