“இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது“: டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் கேட்ட கடைசி குரல்
டைட்டானிக் கப்பல் 111 வருடங்களுக்கு முன்னர் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளான கப்பல் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது ஆழ் கடல் பயணத்தை ஆரம்பித்தது.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலும் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஐவர் இறந்துபோயினர்.
அவர்கள் இறுதியாக பேசிய செய்தியொன்று தற்போது ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.
அதாவது, டைட்டனுக்கும் அதன் மூலக் கப்பலுக்குமான இறுதித் தொடர்பாடல் இதுவென அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடல் நோக்கி அதன் பயணத்தை ஆரம்பித்தவுடன் மூலக் கப்பலிலிருந்த உதவிப் பணியாளர்கள் நீர்மூழ்கியின் எடை, ஆழம், மூலக் கப்பலை காணக்கூடியதாக இருக்கிறதா என்பவற்றை கண்காணித்துள்ளனர்.
ஆரம்பத்தில் தகவல் தொடர்புகள் சீராக இல்லை. ஆனால் சரியாக ஒரு மணித்தியாலத்தின் பின்னர் “இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது“ என்று டைட்டன் செய்தி அனுப்பியுள்ளது.
சரியாக 3346 மீட்டர் ஆழத்தில் இருக்கும்போதே இத் தகவல் வந்துள்ளது. அதன் பிறகு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறுதியில் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியுள்ளது.
கப்பல் வெடித்துச் சிதறிய படங்கள் உள்ளிருந்து ரிமோட் கன்ட்ரோல் கெமரா மூலம் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.