ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் அழிப்பு: லெபனான் மண்ணில் கால் வைத்தால் போர் வெடிக்கும் – ஹசன் எச்சரிக்கை
இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினருக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திய 5000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் 879 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு 4000 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்காக இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்தது.
இவ்வாறிருக்க கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் இஸ்ரேலின் போர் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து பாரிய தாக்குதல்களை நடத்தின.
இத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் 100 ரொக்கெட் ஏவுதளங்கள், 1000 ரொக்கெட் பெரல்கள், ஆயுதக் கிடங்குகள் போன்றன அழிக்கப்பட்டன.
இத் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் இராணுவ வட்டாரங்கள் கூறுகையில், “இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தயாராகி வந்தனர். இதனைத் தடுத்து நிறுத்தவே அவர்களின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகளை முற்றாக அழித்தோம்” என்றது.
இதுகுறித்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா நேற்று வெள்ளிக்கிழமை கூறும்போது,“இஸ்ரேல் வரம்பை மீறி செயல்படுகிறது. அந் நாட்டு இராணுவத்தினர் லெபனான் மண்ணில் கால் வைத்தால் பாரியளவிலான போர் வெடிக்கும்” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.