வரலாற்றில் இடம் பிடிக்குமா இம்முறை தேர்தல்?: விருப்பு வாக்குகளுக்கு வாய்ப்பு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மிக முக்கியமானதாக அவதானிக்கப்படுகின்றது.
இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தி போட்டியிட்ட ஜே.ஆர். ஜயவர்தன தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவை தோற்கடித்து 52.91% வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார்.
இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், அதில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தோற்கடித்து ரணசிங்க பிரமதாச 50.43 வீத வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார்.
1993 ஆம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக பதவி வகித்த டீ.பீ. விஜேதுங்க நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவானார்.
அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 62.26% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காமினி திசாநாயக்க கொலை செய்யப்பட்டதால் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அவரது பாரியார் ஸ்ரீமா திசாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து 51.12 வீத வாக்குகளை பெற்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியானார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 50.02% வாக்குகளை பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தே வெற்றிப்பெற்றார்.
அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து சரத் பொன்சேக்கா போட்டியிட்டார். அந்த தேர்தலில் 57.88% வாக்குகளை பெற்ற மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியானார்.
இந்நிலையில், 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அதில் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 47.58 வீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 52.25 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமாரதிசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள தேர்தல்
1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்தை தாண்டிய வாக்கு வீதத்தை பெற்றுக் கொள்ள முடியாத ஜனாதிபதித் தேர்தலாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்தை தாண்டிய வாக்கு வீதத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இழப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றியாளராக வேண்டுமெனில் வழங்கப்படும் செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்தை தாண்டிய வாக்கு வீதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படும் நிலையில் 1982 இலிருந்து இது வரையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் 50 வீதத்தை தாண்டிய வாக்கு வீதத்தை பெற்றுக் கொண்டமையினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய தேவை காணப்படவில்லை.
அதன் காரணமாக, முதல் தடவையாக இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவதன் மூலம் வெற்றியாளரை தெரிவு செய்யும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது.
வெற்றிபெறும் வேட்பாளர் ஆகக் குறைந்தது 49 வீதம் அல்லது அதற்கு அண்மித்த வாக்கு வீதத்தை பெற்றுக் கொள்வார் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.