செட்டிநாடு வீடுகள்: செட்டிநாட்டு வீட்டின் வெளித்தோற்றம்
நகரத்தார்கள், பரந்த மனதுடையவர்கள் என்பார்கள். அவர்களின் வீடுகளும், அவர்களின் மனதைப் போலவே பரந்து விரிந்தனவைதான்.செட்டிநாடு என்றதும் பருக்கும் முதலில் நினைவுக்கு வருவது செட்டிநாட்டின் பிரமாண்டமான வீடுகள் தாம்.வீடுகள் என்பதை விட அரண்மனைகள் என்று சொல்வது தான் சரி. காரைக்குடி, தேவகோட்டை, கோட்டையூர், திருப்பத்தூர், பள்ளாத்தூர், கானாகடுகாத்தான், கண்டனூர், புதுவயல், என்று ஏறத்தாழ 9 ஊர்களில் கட்டப்பட்டிருக்கும் செட்டிநாடு வீடுகளைப் பார்த்தால் பிரமிக்காமல் இருக்க முடியாது.
தேக்குத்தூண்கள்
அற்புதமாக இருக்கும் அந்த வீடுகளுக்குள் நுழையும் பொழுது. நுழைந்ததும், கோவில் மாதிரியான அலங்கார வளைவுகள், குளிர்ச்சியான திண்ணை, திருமண நிகழ்ச்சிகள் நடத்த நீண்ட முற்றம், பக்கவாட்டில் போஜன ஹால், நடுவில் நீள்சதுரமாக, காற்று வந்து போக விசாலமான முற்றம், பெண்களூக்கென்று தனிப் பகுதி. நுணுக்கமான வேலைப்பாடமைந்த பர்மா தேக்குக் கதவுகள், பெல்ஜியம் கண்ணாடி பதித்த கதவுகள், இத்தாலியன் மார்பிள் பரவிக்கிடக்கும் தரை என்று, பிரமிப்பு நீண்டு கொண்டேதானிருக்கும்.
நீண்டவராண்டா
எத்தனை விசாலம், எத்தனை அழகு. நகரத்தார் சமுகத்தினர் எந்த நாட்டிலிருந்தாலும் தங்களது சொந்த ஊரில் இருக்கின்ற வீட்டிற்குக் கொடுக்கும் கௌரவமே தனி தான்.
முற்றம்
திருமணம், குடும்ப விழாக்கள் என்றால் கூடுவது, கல்யாண மண்டபம் மாதிரி பிரமாண்டம் காட்டுகிற தங்கள் வீடுகளில் தான்.
காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகப் பிரபலமானது.
காரைக்குடியில் உள்ள டாக்டர். அழாகப்ப செட்டியாரின் வீடு, நல்ல உயரத்துடன், ஒரு கோவில் போன்ற ஒரு உணர்வை ஏற்ப்படுத்துகிறது.1908-ல் கட்டப்பட்டது இது. கல்விக்காக ஏகப்பட்ட பணத்தையும், நிலத்தையும் அள்ளி வழங்கிய அழகப்ப செட்டியாரின் வீட்டினுள், அந்தக் கால பூ வேலைப்பாடமைந்த டைல்ஸ், தொழிநுட்பம் காட்டும் தேக்குக் கதவுகள், வளைந்த யானைத் தந்தங்களுக்கிடையே காந்தி படம், கூரையில் சரம்சரமாக விளக்குகள் என்று பிரமாண்டம் பளீரிடுகிறது. வீட்டின் சாவியின் எடையே ஒரு கிலோ இருக்கும்.
வெளிநாட்டு வேலைப்பாடுகள்
பிரமாண்டத்திற்கு பெயர்போன இன்னொரு ஊர் கானாடுகாத்தான். செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரின் அரண்மனையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. உள்ளே போகப் போக விரிந்து கொண்டிருக்கும் அரண்மனை, வெளிநாட்டு பளிங்குக் கற்கள் போட்ட திண்ணைகள் என்று சினிமாவில் மட்டுமே பார்க்க முடிந்த வனப்புகள்.
குமுதம் எடிட்டர் ஏ.எஸ்.பி அவர்களின் வீடு, வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத பிரமாண்டம் உள்ளே சென்றதும் திக்குமுக்காட வைக்கிறது. ஒரு கல்யாண மண்டபத்தில் இருப்பதை விட பெரிதான, எல்லா வசதிகளும் கொண்ட போஜன ஹால் வியப்பை வழங்குகின்றது.
கோட்டை வீடுகள், பர்மா தேக்குகளைக் கொண்டு நிலைக் கதவுகளையும், இத்தாலியிலிருந்து வந்த மார்பிள்கள் என்று அழகுக்கு உரம் சேர்த்தார்கள்.
தெற்காசிய நாடுகளில் பிரிட்டிஷாருடன் வணிகத் தொடர்பு இருந்ததால். இவர்களது கட்டிடங்களிலும் அந்தச் சாயல்கள் வந்தன, நகரத்தாரின் வீடுகளில், நிலைக் கதவுகளின் மேலிருக்கும் சூரியப் பலகை விசேஷமானது. பல வீடுகளில் நிலைக் கதவுகள் நுணுக்கமான வேலைப்பாடுடன் அமைந்திருக்கும்.இந்த வீடுகளை கட்டுவதற்காகவே ஆசாரிகளும், ஸ்தபதிகளும் எழுவங்கோட்டை என்கிற கிராமம் முழுக்க இருந்தார்கள் . இந்தக் கட்டிடங்களுக்குத் தேவையான செங்கற்களை அனுப்ப, ராஜபாளையத்தில் தனியாகக் கொத்தனார் தெருவே இருந்திருக்கிறது.
இலங்கையில் யாழ்ப்பானத்திலிருந்து பொடுசு என்ற மரம்னும், பர்மாவிலிருந்து தேக்கு, ரோஸ்வுட், இலுப்பை ஆகிய மரங்களையும் வரவழைத்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
நகரத்தாரின் வீடுகள் கட்டி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் சுவர்கள் இன்னும் வழவழப்பாகவும் இருப்பதற்குக் காரணம் சுண்ணாம்புச் சாந்துடன் முட்டை, கருப்பட்டி, கடுக்காய் ஆகியவற்றின் கலைவையும் பயன்படுத்தியது தான்., வீடுகளைக் கட்டிக் கொண்டதுடன், அருகில் நல்ல ஊரணிகளையும் அமைத்துக் கொண்டார்கள். அவை இன்றும் குடிநீராகப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நகரத்தார்களுக்கு வீடு என்பது, அந்தஸ்தின் அடையாளம். கல்யாணம், சடங்கு போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், அதைத் தங்கள் வீடுகளிலேயே நடத்த விரும்பியதும் இன்னொரு காரணம்.
செட்டிநாட்டுப் பக்கம் நாம் எப்பொழுது சென்றாலும் அனுமதி பெற்று, அங்குள்ள நகரத்தார் வீடுகளைச் சுற்றி பார்க்கலாம். நகரத்தாரின் கம்பீரத்தையும், அழகுணர்ச்சியும், செல்வ பலத்தையும், பரந்த மனத்தையும் அவை காட்டிக் கொண்டு கம்பீரமாக நிற்கின்றன.
இந்தச் சின்ன கிராமத்தில், ஒரு விமான நிலையம் இருந்தது . ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு முன்பே, சொந்தமாக விமான தளம் வைத்திருந்து, விமானத்தை ஓட்டிருக்கிறார்.
ஒரு நகரத்தார். அவர் எஸ்.ஏ.அண்ணாமலை செட்டியார் (குமுதம் எடிட்டர் ஏ.எஸ்.பி-யின் சித்தப்பா) செட்டிநாட்டுப் பகுதிகளில் இப்படி பிரமாண்ட வீடுகளை நகரத்தார்கள் கட்டியதன் காரணம்.1870 முதல் 1930 வரை நகரத்தார்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம். பிரிட்டீஷ்காரர்களின் இம்பீரியல் வங்கியில் கடன் வாங்கி, வெளிநாடுகளுக்குச் சென்று, சுற்றி அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வருமானம் ஈட்டினார்கள்.
பர்மா, மலேயா, இலங்கை, இந்தோனிஷியா நாடுகளில் வியாபாரத்திலும், பேங்கிலும் உச்சத்திலும் இருந்தார்கள் நகரத்தார்கள். அந்தச் சமயங்களில் தான்செட்டிநாட்டில் ரசித்து, ரசித்து வீடுகளைக் கட்டினார்கள்.
ஆங்கிலேய – இந்திய பாணிக் கலவையில் உருவானவை நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் வீடுகள்.