நாட்டிலிருந்து வெளியேறத் தயாராகும் பல எம்.பி.க்கள்
ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பல ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் பின் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச நேற்று அதிகாலை 2.55 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் நாட்டிலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தங்க பாதை வசதியின் ஊடாக அவர் டுபாய்க்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மாமியார் (மனைவியின் தாய்), இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றுமொரு உறவினர் பெண் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சில்க் ரூட் முனையத்தின் ஊடாக நேற்று காலை டுபாய் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போதுள்ள பிரதான அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 80 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விசாவை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலை உருவாகியுள்ளதால் யாருக்கும் நிச்சயமற்ற வெற்றி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் வன்முறைகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சமீபத்திய செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராகியுள்ளனர்.