அமெரிக்க தேர்தலில் ஈரானின் செல்வாக்கு; ட்ரம்பின் தகவல்களைத் திருடிய ஹேக்கர்கள்
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
குறித்த தேர்தலில் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதியான பைடனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
எனினும் பின் நாட்களில் உடல் நலக்குறைவு காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த ஹக்கர்கள், பைடன் வேட்பாளராக இருந்த வேளை, ட்ரம்பின் பிரச்சாரங்கள் தொடர்பான தகவல்களைத் திருடி, மின்னஞ்சல் ஊடான பைடனின் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும் எந்தவொரு பெறுநர்களிடமிருந்தும் ஹேக்கர்கள் எந்தப் பதிலையும் பெற்றதற்கான எதுவிதமான ஆதாரமும் தற்போது இல்லை என்றும் உளவுத்துறை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவமானது தற்போது அமெரிக்க அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.