பல் கலாசாரம்… கனடா சிறு கதை 02… எஸ்.ஜெகதீசன்
மொன்றியல் ஓங்காரநாயகன் கல்யாண மண்டபம் நிறைந்திருந்தது. மணமகன் ஏகன். சமயம் இந்து. பூர்வீகம் இலங்கை. மணமகள் ஏரா.சமயம் ஷாமானிசம். பூர்வீகம் தென் கொரியா.
மாப்பிள்ளையும் தோழனும் மணவறையில் அமர்ந்திருந்தனர். தேங்காய் உடைத்தனர். கற்பூரம் காட்டினர்.
“வட்ட வடிவில் சம அளவில் தேங்காயை எப்படி உடைத்தார்கள்?” அதிசயித்தான் தோழன்.
“தாலிகட்ட முன்பாக மாப்பிள்ளை வீட்டார் பரிசுப் பொருள் தர வேண்டும். அது எமது வழக்கம். என்ன கொண்டு வந்தீர்கள்?” மேடையிலிருந்த மணமகனின் தந்தை சுந்தரமூர்த்தியைப் பார்த்து வினவினர் மணமகளின் தந்தை ஜிஜோ. மாப்பிள்ளை எழுந்தார்.மண்டப வாசலை நோக்கி நடந்தார்.
“காப்பு கட்டியபின் மணவறையை விட்டு விலகக் கூடாது” புரோகிதரின் குரல் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
மண்டபத்தின் இடது புறம் மாப்பிள்ளை பகுதியும் வலது புறம் ‘பொம்பிளை’ பகுதியும் இருந்தனர். அதுவும் கொரியா வழக்கமாம்.
“அதற்குள் காசி யாத்திரைக்கு புறப்பட்டுவிட்டாரோ” என்றது இலங்கைத் தரப்பு.
“கோபித்துக் கொண்டு போகிறாரோ..போகட்டும்.பரிசாக ஏதாவது தரும்வரை நாம் அனுமதிக்கமாட்டோம்” என்றது கொரியாத் தரப்பு.
மாப்பிள்ளைக்கு மிடுக்கு என்றனர் சிலர். மாப்பிள்ளைக்கு முடுக்கு என்றவரும் உளர்.
“மாப்பிள்ளை காரியகாரன். மண்டப வாசலில்தான் மணமகளின் காத்திருப்பு அறை இருப்பது அவருக்குத் தெரியும்.” என்றது சபை மணப்பெண் மீண்டும் அலங்காரம் செய்ய தாமதமாகியது.
“உள்ளுருக்கும் உலகுக்கும் எவ்வளவு வித்தியாசம்.” என்றார் ஒருவர்.
“சுந்தரமூர்த்தியின் மூத்த மகன் சுவீடன் நாட்டுப்பெண்ணை மணம்முடித்தார். திருமண வரவேற்பு வித்தியாசமாயிருந்தது. மணப்பெண் மாப்பிள்ளையை விட்டு சற்றே நகர்தால் காணும். அங்கிருந்த பெண்கள் அனைவரும் மாப்பிள்ளையை முத்தமிட்டுக் கும்மாளமடித்தனர். அதே போல அங்கிருந்த ஆண்களும் விட்டுவைக்கவில்லை. மாப்பிள்ளை வெளியே போனதும் மணமகளை முண்டியடித்து முத்தமிட்டனர்.” வேடிக்கையான சம்பிரதாயம் என்றார் வேறொருவர்.
“சுந்தரமூர்த்தியின் இரண்டாவது மகன் கட்டியது ஒரு பஞ்சாபியை. அங்கும் பிரபலமான சடங்கு எமக்கு விசித்திரமாயிருந்தது. தமிழ்த் திருமணங்களில் மோதிரத்தை குடத்துக்குள் மணமக்கள் தேடோதேடென்று தேடுவது போல அங்கு மணமக்கள் இருவரும் தத்தமது காலணிகளை தேடிக்களைத்துவிடுவதற்குள் விருந்தே முடிந்துவிடும். அவற்றை மறைத்து வைத்த தோழர்களும் தோழிகளும் பெருந்தொகை லஞ்சம் பெற்ற பின்னரே திருப்பிக்கொடுக்கும் கலாசாரம் அவர்களுடையது” என்றார் இன்னொருவர்.
“உது தெரிந்துதான் மிகவும் உயர்ரக சப்பாத்தையே நான் பரிசாக கொண்டு வந்துள்ளேன்” பிரதாபம் காட்டினார் அருகிலிருந்த சாப்பாத்துக் கடைக்காரர்.
“தெரியாதோ நோக்கு தெரியாதோ..கொரியாவில் சப்பாத்து பரிசாகக் கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால் காதல் காலாவதி ஆகிடுமாம்.” பாட்டுப்பாடினார் பதிலாக ஒருவர்.
“மூன்றாவது மகன் கட்டியது ஒரு கென்யாக்காரியை. விசித்திரத்தை மாப்பிள்ளை பகுதியே கேட்டு வாங்கியது. அவர்களின் நாட்டுப்புற நம்பிக்கை ஏதாவது கல்யாணத்தில் தேவை என்றதற்கு மணமகள் மொட்டையடித்து மணவறைக்கு வரவேண்டும் அல்லது மணமகன் சிறிது நேரம் எறும்பு புற்றுக்குள் கைகளை வைத்திருக்க வேண்டும் என்றிருக்கின்றனர். முதலாவது சகிக்க முடியாதிருக்கும் என்பது தெரிந்ததால் இரண்டாவதை சகிக்க முன் வந்தனர்” என்றார் ஒருவர்.
காத்திருப்பு அறையிலிருந்து தோழியர் புடை சூழ மணவறை நோக்கி குனிந்த தலை நிமிராது கண்களை சற்றேனும் உயர்த்தாமல் மணமகள் நடந்து வந்தது தமிழ் மரபு போலத் தோன்றினாலும் கொரியரின் மரபும் அதுதானாம்.
மணமகளின் சாந்தத்தையும் கண்ணியத்தையும் அது காட்டும் என்பது அவர்களின் ஐதீகம்.
தமிழ் தரப்பு புகைப்படக்கார் தன்னாலான சகல வழிகளையும் மேற்கொண்டு பார்த்தார். மணமகள் கொஞ்சமாவது சிரித்தால்தானே? அட்லீட்ஸ்ட் சிறு புன்னகை கூட கிடையாது.
“அட உனக்கு விசயமே தெரியாதா?” என்றார் கொரியா தரப்பு புகைப்படக்கார். கல்யாணத்தின் போது மணமகள் உம் என்றிருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது கொரியாவின் சம்பிரதாயம். சிரித்தால் பெண் குழந்தை பிறக்கும்.
முன்பு திருமணங்கள் பெரும்பாலும் ஊருக்குள் உறவுக்குள் அல்லது அயலில் அருகில் நிகழ்தன.
இப்பொழுது நாட்டுக்கு நாடு அல்லது கண்டத்துக்கு கண்டம் என விரிந்துள்ளன.
எங்களுடைய மகளுக்கு உங்களுடைய மகனை மாப்பிள்ளை கேட்டு வந்துள்ளோம்.யோசித்து நல்ல முடிவைச் சொல்லுங்கோ! சொந்தபந்தம் தொடர வேண்டும் என்பதுதான் எமது ஆசை! சுமார் எழுபது எண்பது வருடங்களுக்கு முன் திருமண பேச்சுக்கால் இவ்விதம் ஆரம்பிக்காத கிராமங்கள் இல்லை என்றே கூறலாம்.
எதனையும் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற பெரு விருப்பம் இளைஞரிடம் மேலோங்குகின்றது.
அதுவும் அவர்களது திருமணம் என்றால் கேட்கவா வேண்டும். எப்பாடுபட்டாவது ஏதாவது விநோதம் ஒன்றை திணித்துவிடுவர்.
“மாங்கல்யம் தந்து நாநே நா” என்ற ஓங்கிஒலித்த குரலுடன் சபை எழுந்தது.
அட்சதைப்பூக்களை எவருமே சொரிந்ததாகத் தெரியவில்லை.
அனைவரது கரங்களும் அலைபேசிகளுடன் உயர்ந்தன. அழகாய் கிளிக்கின.
தமிழருக்கு கற்கண்டும் கொரியருக்கு ஜூஜூப்ஸ் மிட்டாயும் வழங்கப்பட்டது.
ஓரளவிற்கு சடங்குகள் அனைத்தும் நிறைவுறும் வேளையில் மணமகள் ஏரா மணமகன் ஏகனின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள். ஏகனின் முகம் இருண்டது.
எங்கேயாவது ஓடி தப்பலாமா போன்று பாவனை செய்தான்.
அதே சமயம் ஏராவின் பக்கத்திலிருந்து ஏழெட்டுத் தடியன்கள் ஏகனை பலவந்தமாக அழுத்திப்பிடித்தனர்.காலணி உறைகளை உருவி எறிந்தனர். இரு கால்களையும் இணைத்து இறுகக்கட்டினர். பெரிய தடிகளாலும் நீண்ட கருவாடுகளாலும் இரு பாதங்களிலும் அடிஅடி என்று அடித்தனர்.
இடைக்கிடை ஏகனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் கூட அவனது காதுகளை வலிக்கச் செய்திருக்கும்.
எல்லாவற்றையும் கொரியர் கை கொட்டி சிரித்தனரரே தவிர எவருமே தடுக்க எத்தனிக்கவில்லை. இதனை மணமகனின் பக்கத்தினரே செய்திருக்க வேண்டும். ஆனால் ஒருவரும் முன்வராததால் தாம் செய்ததாக விளக்கம் வேறு.
மணமகனின் அறிவும் மன வலிமையும் மேம்படும் என்ற நம்பிக்கையில் திருமணங்களில் அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்கு இதுவாகும்.
“பல் கலாசாரம் உள்ள நாடு கனடா. அதில் பல் கலாசாரம் உள்ளது எங்கள் வீடு” என்றார் சுந்தரமூர்த்தி.
தமிழரல்லாத மருமக்கள் நால்வரும் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் தெரிந்தார்கள். நால்வரது கழுத்திலும் தாலி ஜொலித்தது. நீண்ட பட்டுப் புடவையின் முகதலை மட்டும் நிலத்தில் இழுபட்டு நெளிந்தது.