முச்சந்தி

முஹம்மது இல்யாஸின் வாக்குகள் இரத்துச் செய்யப்படும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி காலமானதையடுத்து வாக்குச் சீட்டில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

முஹம்மது இல்யாஸ் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதன் பின்னர் 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

அதன்படி, நான்காவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த முஹம்மது இல்யாஸ் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி காலமானார்.

முஹம்மது இல்யாஸ் காலமானதையடுத்து அவருடைய இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்ததுடன், அவருடைய இடத்திற்கு இன்னொரு பெயரை முன்மொழிவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் கடந்த செப்டம்பர் ஐந்தாம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாயின் அந்த வேட்பாளர், முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 31 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31(1) சனாதிபதி பதவிக்கெனத் தேர்ந்தெடுக்கக்கூடிய தகைமை கொண்ட எந்தப் பிரசையும்

(அ) அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியினால், அல்லது

(ஆ) அவர், நடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது முன்னர் பதவி வகித்திருந்தால், வேறேதேனும் அரசியற் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரைப் பதிந்துள்ளவரான ஒரு தேருநரால், அத்தகைய பதவிக்கான வேட்பாளராகப் பெயர் குறித்து நியமிக்கப்படலாம்.

இதன்படி, முஹம்மது இல்யாஸின் வெற்றிடத்திற்கு முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக மறைந்த முஹம்மது இல்யாஸின் மனைவி முகமது இல்யாஸ் ஜமீனாவிடம் factseeker வினவிய போது, ​​உரிய வெற்றிடத்திற்கு தனது பெயரை முன்மொழிந்ததாகவும், எனினும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தனக்கு போட்டியிட முடியாத காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கையை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எமது தரப்பில் இல்லாத காரணத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை என முகமது இல்யாஸ் ஜமீனா தெரிவித்தார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவிய போது, ​​தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் வெற்றிடத்திற்கு எவரையும் முன்னிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், ஒரு சுயேச்சை வேட்பாளரின் வெற்றிடத்தை முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரால் மட்டுமே நிரப்ப முடியும் என்றார்.

மேலும், வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஐதுரூஸ் முஹம்மட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்ட அவர், எவ்வாறு இருப்பினும் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸுக்கு கிடைக்கும் வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் ஊசி சின்னத்துடன் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் என்ற அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும் அவருக்கான வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் என்பதையும் factseeker பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகின்றது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.