முச்சந்தி

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்ரெம்பர் 7ம் நாள் சனிக்கிழமை, நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இது தொடர்பான கருத்தாடல் இடம்பெற்றிருந்ததோடு, ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய பேரியக்கத்திற்கான தொடக்க புள்ளியாக தமிழ் பொதுக்கட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையானது, தமிழர் தேசத்தின் அடிப்படைக் கோட்பாட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக கருதுவதோடு, பொதுவாக்கெடுப்பினை நோக்கிய செயல்முனைப்புக்கான தொடக்க புள்ளியாக எண்ணுகின்றோம் என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய தேசிய இனம் என்பதனை வெளிகாட்டி, நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, 2009ம் ஆண்டு மிகப்பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு, தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்றது.

இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் ஊடாக தமிழர் தேசத்தில் தனது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற சிங்கள பேரினவாத அரசு, ஈழத்தமிழர்களை தனது அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் அடிமைகளாக வைத்திருக்க முனைவதோடு, ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனை நீக்கம் செய்ய முனைகின்றது.

இச்சூழலில் ஈழத்தமிழர் தேசிய இனமாக, தேசமாக தமது திரட்சியினை உலகிற்கு சங்காய் முழங்க வேண்டிய காலமாக இன்றிருக்கின்றது.

இலங்கைத் தீவினை மையப்படுத்திய இந்திய பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில், தமிழர் தேசத்தின் திரட்சியினை வெளிக்காட்டுவதன் வழியே, நம்மை சக்திமிக்க ஓர் தரப்பாக வெளிக்காட்ட வேண்டிய அரசியற்சூழல் காணப்படுகின்றது.

இந்நிலையில் தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான நிலைப்பாட்டினை, அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஓர் கருவியாக கையாளும் ஓர் உத்தியாகவே, தமிழர் தேசத்தினரால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளரை நாம் கருதுகின்றோம்.

தமிழ்த் தேசிய பேரியக்கத்திற்கான தொடக்க புள்ளியாக தமிழ் பொதுக்கட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையானது, தமிழர் தேசத்தின் அடிப்படைக் கோட்பாட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக கருதுவதோடு, பொதுவாக்கெடுப்பினை நோக்கிய செயல்முனைப்புக்கான தொடக்க புள்ளியாக எண்ணுகின்றோம்.

தமிழர் தேசம், சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பளிக்கக் கூடிய வகையில் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை வலியுறுத்தியும்…

சிறீலங்கா தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நிலைமாறுகால நீதியினை வலியுறுத்திய நிலையில், தமிழர் தேசத்தின் பரிகார நீதியினை வலியுறுத்தியும்…..

தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்க, ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் வழியே,பொறுப்பு கூறலை ஐநா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டுமெனவும்…..

தமிழர் தலைவிதி தமிழர் கையில் பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தும் வகையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும்…..

சிங்கள தேசத்தின் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணிகளில் முதன்மையாக தமிழர் தேசத்தின் மீதான இராணவ நடவடிகையும், இராணுவ ஆக்கிரமிப்பு செலவீனங்களுமே என்பதனை வலியுறுத்தியும்…..

தமிழர் தேசத்தின் அரசியல் இறைமை என்பது நிலத்தை மட்டுமல்ல கடலையும் உள்ளடக்கியது என்பதனையும் வலியுறுத்தி நிற்கின்ற தமிழ்பொதுவேட்பாளருடைய தேர்தல் அறிக்கையினை வரவேற்பதோடு, தமிழ்பொதுவேட்பாளரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கின்றது.

தேர்தல் அரசியலைக் கடந்து, விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.