முச்சந்தி

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு : பொருத்தமான அறிக்கையை வெளியிடுவோம்

நாங்கள் இறுதி முடிவை எப்போது எடுப்போம் என்பது தான் முக்கியமானது. ஆகவே கட்சி எடுத்த தீர்மானத்திலும் இன்று நாங்கள் என்ன திருத்தங்களை மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் பேசியிருக்கிறோம். அதற்கு பொருத்தமான ஒரு அறிக்கை நாங்கள் வெளியிடுவோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த தேர்தலில் எங்களுடைய மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதற்காக எங்களுடைய கட்சி ரீதியான கொள்கை, எங்களுடைய இனப்பிரச்சினை தீர்வு, சமஷ்டி, சுயநிர்ணய அடிப்படையிலான தீர்மானங்கள், அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வேட்பாளராக உள்ள சஜித் பிரேமதாசாவின் கருத்துக்கள் தேர்தல் அறிக்கை விடயங்களையும் நாங்கள் கருத்தில் கொண்டு, அதில் எங்களுக்கும் அவருக்கும் இணக்கம் ஏற்படக்கூடிய விடயங்களை அடையாளப்படுத்தி நாங்கள் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிக்கு முன்னதாக எங்களால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை பொதுமக்களுக்காக வெளியிடவுள்ளோம்.

இந்த தேர்தல் தொடர்பில் கொள்கை அடிப்படையிலும் இனத்தின் விடுதலையை அடிப்படையாகவும் அதேவேளை சஜித் பிரேமதாசாவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் சார்பாகவும் அது தொடர்பில் எங்களுடைய கருத்துக்கள் என்ன என்பது தொடர்பிலும் அந்த அறிக்கையை நாங்கள் வெளியிட இருக்கின்றோம்.

ஆகவே இந்த ஐவர் அடங்கிய குழு மீண்டும் கூடி அந்த அறிக்கையை பத்திரிகையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் வெளியிடுவோம்.

ஒரு தமிழினத்தின் அரசியல் தலைவர் என்ற ரீதியிலும் ஒரு பிரதான கட்சியினுடைய தலைவர் என்ற ரீதியிலும் உங்களுடைய கட்சி சஜித் பிரேமதாசாவை தெரிவு செய்திருக்கின்ற நிலையில் நீங்கள் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்று கூறுகின்றமை தமிழ் மக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை சொல்வதாக இருக்காதா என ஊடகவியலாளர் கேட்டபோது,

நான் ஒருபோதும் மாறுபட்ட கருத்துக்களை கூறவில்லை. நான் ஆரம்பத்தில் நான் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களது தீர்மானத்திற்கான விளக்கம் எனக்கு என்ன என்று தேவைப்பட்டிருந்தது.

ஆகவே அந்த நேரத்தில் சொன்ன கருத்து கட்சி எடுத்த தீர்மானத்தை நாங்கள் ஆராய்ந்து எவ்வாறு மக்கள் மத்தியில் முன்வைப்பது என்பது பற்றி தான் நான் சொல்லியிருந்தேன். வேறு ஒரு விதமான கருத்தை நான் சொல்லவில்லை.

பத்திரிகைகள் ஒரு தலைப்புச் செய்தியை கண்டுபிடித்து வெளியிட்டதை நான் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதாக பரப்புவது பிழையானது.

ஆகவே கட்சியினுடைய கூட்டத்தில் நான் பங்கு பற்ற முடியாத நிலையில் வெளியிட்ட கருத்தை கட்சியுடன் பேசுவதற்கு நாங்கள் இன்றும் மூன்றாவது முறையாக கலந்துரையாடி இருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் இறுதி முடிவை எப்போது எடுப்போம் என்பது தான் முக்கியமானது. ஆகவே கட்சி எடுத்த தீர்மானத்திலும் இன்று நாங்கள் என்ன திருத்தங்களை மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் பேசியிருக்கிறோம். அதற்கு பொருத்தமான ஒரு அறிக்கை நாங்கள் வெளியிடுவோம்.

ஆகவே கட்சியினுடைய பயணம், மக்களுடைய பலம், ஜனநாயக ரீதியாக வாக்களிக்கின்ற போது நாங்கள் தேவைப்பட்ட திருத்தங்களை செய்து இறுதியாக ஒரு அறிக்கையை தயாரித்து வெளியிடுவது எங்களுடைய தேர்தல் சம்பந்தமான அறிக்கையாக இருக்கும்.

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இன்றும் நாங்கள் அந்த அறிக்கையை தயாரிப்பதற்கு நியமித்த குழுவோடு பேசி வெளியிடுவதற்கு கலந்துரையாடுகிறோம்.

ஆகவே உங்களுடைய நிலைப்பாடு மாற்றம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது,

அது தொடர்பில் தற்போது கூறுவதற்கு தயார் இல்லை. நாம் இன்று பேசியதற்கு தொடர்ச்சியாக அடுத்த கூட்டத்திலும் கலந்துரையாடுவோம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.