தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டத்திற்கு எதிரான முறைப்பாடு நிராகரிப்பு: கனடா மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன், இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கனடா நீதிமன்றம், இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தது.
கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கருத்து சுதந்திரம், சமத்துவ உரிமைகளை மீறுவதாகவும், தமிழ் இனப்படுகொலை குறித்த மாற்றுக்கருத்துக்களை முடக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்தது.
எனினும் அந்த அமைப்பின் முறைப்பாட்டை நிராகரித்துள்ள ஒன்ராறியோ மேல்முறையீட்டு நீதிமன்றம் . இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது எனவும் அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தின் முன்னுரையில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை கொள்கைகள் என குற்றம்சாட்டப்படும் கொள்கைகள் சிங்கள பௌத்த மையப்படுத்தப்பட்டவை என்றே குறிப்பிடப்படுவதாகவும், சிங்கள பௌத்தர்கள் ஒரு இனக்குழுவாக அதற்கு பொறுப்பாளிகள் என தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றின் இந்த உத்தரவை அடுத்து, தமிழ் இனப்படுகொலை குறித்து ஒன்ராறியோமாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த முடிவு குறித்து ஸ்காபரோ றூஜ் பார்க் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் இந்த சட்ட மூலத்திற்கு எதிரான வழக்கில் உதவ 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் முன்வந்ததையும் அவர் பாராட்டியுள்ளார்.