காஸாவில் தாக்குதலில் 40 பேர் பலி; 60 பேர் காயம்
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். 60 பேர் பலத்த காயமுற்றனர்.
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், 2023 அக்., 7 முதல் போர் நடக்கிறது. காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட, 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. காஸாவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் படையினரின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்க மறுக்கிறது.
இந்நிலையில், இன்று (செப்.,10) காஸாவின் முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும், கான் யூனிஸ் பகுதி போரின் ஆரம்பத்தில் இருந்து இஸ்ரேல் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
இது குறித்து காஸா பாதுகாப்பு படை அதிகாரி முகமது அல்-முகைர் குறிப்பிடுகையில், “காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக எங்கள் குழுவினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர். 20 முதல் 40க்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன” என்றார்.