இந்திய மீனவர்கள் கைது – தமிழகத்தில் போராட்டம்: அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய கூறினார். இதன்போது அவர்கள் பயணித்த 03 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
குறித்த மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேந்த 14 மீனவர்களே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் கைது கைது செய்யப்பட்டமை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாம் எதிர்கொள்ளும் மோசமான நிலையைக் கண்டு மாநில மற்றும் மத்திய அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக கே.ஆர். ஜெகதாப்பட்டினம் மீனவர் தலைவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“ எங்கள் சகோதரர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதால், மக்கள் இப்போது மீன்பிடிக்கவும், தங்கள் வழக்கமான வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் கடலுக்குச் செல்வது குறித்து கவலைப்படுகிறார்கள்.
இலங்கை கடற்படையினரால் மூன்று இயந்திர படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் சில நாட்கள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் எங்கள் படகுகள் விடுவிக்கப்படாது.இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” என கவலை வெளியிட்டுள்ளார்.