வெனிசூலாவில் பதற்றம்: எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட எட்மண்டோ ஸ்பெயினில் தஞ்சம்
வெனிசூலாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட எட்மண்டோ கான்சலஸ் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் ஸ்பெயினில் தஞ்சம் கோரியிருப்பதாகவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசூலாவில் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கான்சலஸ் மற்றும் 08 பேர் போட்டியிட்டனர்.நிகோலஸ் மதுரோவுக்கும், எட்மண்டோ கான்சலசுக்கும் இடையே போட்டி நிலவியது.
சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. ஆனால், அதனை எதிர்க்கட்சி கூட்டணி நிராகரித்தது.பல மேற்கத்திய நாடுகளும் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்தன.
மூன்றில் இரண்டு பங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து எதிர்க்கட்சியினரால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட தரவுகள், கான்சலஸ் வெற்றி பெற்றதை காட்டுகின்றன. இதனால் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
வெனிசுலாவில் தேர்தல் முடிவுகளின் இறுதிச் சான்றாக மின்னணு வாக்குப்பதிவு எந்திர தரவுகள் கருதப்படுகின்றன. இதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல்களில், தேர்தல் ஆணைக்குழு 30,000 இற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகளை ஒன்லைனில் வெளியிட்டது.
ஆனால் மதுரோவின் கட்டுப்பாட்டில் உள்ள குழு இந்த முறை எந்த தரவையும் வெளியிடவில்லை. எதிர்க்கட்சியினரால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்துகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், எதிர்க்கட்சி வேட்பாளர் கான்சலஸ் தேர்தல் நாசவேலையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நாசவேலை தொடர்பான விசாரணைக்காக கான்சலஸ் மூன்று முறை முன்னிலையாக தவறியதால் அவரைக் கைது செய்யவேண்டும் என அட்டர்னி ஜெனரல் டாரெக் வில்லியம் சாப் வலியுறுத்தினார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணையத்தில் பகிர்ந்த தகவல் போலியானவை என்றும் தேர்தல் ஆணையத்தின் பணியை குறைத்து மதிப்பிடும் முயற்சி என்றும் அவர் கூறினார்.
விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
ஆனால் கான்சலஸ் தரப்பிலிருந்தோ, வெனிசுலா எதிர்க்கட்சி தரப்பில் இருந்தோ இதுவரை கருத்து தெரிவிக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.