சஜித்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள அனுர; சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கோருகின்றார் ரணில்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்கவை ஒருபோதும் தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரால் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை தோற்கடிக்க முடியாமல் போனது வரலாற்றில் முதல் தடவை என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
மஹிங்கனையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் மூலோபாயத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அரசியல் கட்சிகளுக்குள் தனித்துவத்தையும் கட்டுப்பாட்டையும் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கையில் அரசியல் போட்டியின் வரலாற்று சூழலைகளையுமு் எடுத்துரைத்தார்.
ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற கடந்த கால தலைவர்களின் உதாரணங்களையும் ஜனாதிபதி மேற்கோள் காட்டினார்.
ஜே.ஆர்.ஜயவர்தன, முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க, மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒவ்வொருவரும் தங்கள் கட்சிகளின் மீது உறுதியான கட்டுப்பாட்டை வைத்திருந்தனர்.
இறுதியில் தங்களின் கட்சிகளை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் அணுகுமுறையானது தினமும் நாடாளுமன்றத்தில் பேசுவதாகும், இது அனுரகுமாரவின் புகழை தற்செயலாக உயர்த்திவிட்டது.
“இப்போது, அனுரகுமார சஜித் பிரேமதாசவுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருக்கிறார், எனினும், அவர் வெற்றிபெற வாய்ப்பில்லை. சஜித்துக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் அனுரகுமாரை திறம்பட ஆதரிக்கிறது.”
ஆகையினால், சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறும், அதற்கு பதிலாக எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.