சர்ச்சைக்குரிய டிரம்ப் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்: தேர்தலுக்கு முன்பு வெளிவரும்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான டோனல்ட் டிரம்ப்பின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அத்திரைப்படம் வெளிவரும் என்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய அப்படம், டிரம்ப், தமது மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற செயல்களைச் சித்திரிக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளது.
இந்த படத்துக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
‘தி அப்பிரென்டிஸ்’ என்ற பெயரைப் கொண்ட அந்தப் படத்தை பிரையர்கிலிஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை.
டிரம்ப்பின் இளம் பருவத்தைச் சித்திரிக்கும் ‘தி அப்பிரென்டிஸ்’, கடந்த மே மாதம் நடைபெற்ற பிரான்சின் கான் திரைப்பட விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் தமது முதல் மனைவியான இவானாவைப் பாலியல் பலாத்காரம் செய்ததைச் சித்திரிக்கும் காட்சிதான் அதிகமாகப் பேசப்பட்டது.
நிஜத்தில் விவாகரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது டிரம்ப், தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இவானா குற்றஞ்சாட்டினார். பின்னர் அந்தக் குற்றச்சாட்டை அவர் மீட்டுக்கொண்டார். இவானா 2022ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.