இலங்கை

வவுனியாவில் அம்புயூலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர்: கடத்திச் செல்ல முற்பட்டதாக குற்றச்சாட்டு

வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் அம்புயூலன்ஸ் வண்டியில் இருந்து குதித்துள்ளார்.

அம்புயூலன்ஸ் வண்டியில் தன்னை கடத்திச் செல்வதாக உணர்ந்து வைத்தியர் குதித்தமையால் பதற்றம் ஏற்பட்டு சாரதி மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, வைத்தியர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டதுடன் அம்புயூலன்ஸ் வண்டியில் இருந்த சாரதி உட்பட இருவர் நெளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் வண்டியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியாசாலையில் இருந்து 4ம் கட்டைப் பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அம்புயூலன்ஸ் வண்டியில் உணவு கொண்டு செல்வது வழமை.

குறித்த உணவுகளை வழங்கிவிட்டு அம்புயூலன்ஸ் வண்டி வவுனியா நோக்கி பயணித்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் வண்டியை மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற அம்புயூலன்ஸ் வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக நெளுக்குளம் நோக்கி புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்புயூலன்ஸ் வண்டியில் இருந்த பெண் வைத்தியர் வண்டியின் கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து அம்புயூலன்ஸ் வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Oruvan

இதனையடுத்து வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிஸிற்கு சென்று அம்புயூலன்ஸ் வண்டியை விடுவித்துள்ளனர்.

இது தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பியதாகவும் இதன்போது சகோதரமொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக தன்னை கடத்துவதாக நினைத்து குதித்தாக வைத்தியசாலையின் ஒரு தரப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அம்புயூலன்ஸ் வண்டியின் பயணிக்கும் விளக்க அட்டையில் (running chart) குறித்த ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் வவுனியா பொதுவைத்தியசாலைக்கும் இடையில் சென்று வருவதற்கான மொத்த தூர அளவு 20 கிலோமீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், உண்மையாகவே 16 கிலோமீட்டர் தான் தூர அளவு என்பதனால் அதனை சமப்படுத்துவதற்காக வேப்பங்குளத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் நெளுக்குளம் திசைக்கு சென்று குழுமாட்டுச்சந்தியிலிருந்து மருக்காறம்பளை , தாண்டிக்குளம் பகுதிகள் ஊடாக வவுனியா வைத்தியசாலைக்கு செல்வதனால் 20 கிலோமீட்டர்கள் சமனாகும்.

அதற்காகவே அம்புயூலன்ஸ் வண்டியை திருப்பியதாகவும் இதனால் குழுப்பமடைந்த பெண் வைத்தியர் அச்சத்தில் கீழே குதித்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர் முறைப்பாட்டை மீளப்பெறுவதற்கான முயற்சிகளும் நேற்றைய தினம் இரவு மேற்கொள்ளப்பட்டதாக அறியக்கிடைக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.