உலகம்

டெலிகிராம் செயலி நிறுவனர் கைதுக்கு வலுக்கும் கண்டனம்

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வருகின்ற நிலையில், அவரை விடுவிக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஐரோப்பிய நாடான பிரான்சில், போதை பொருள் கடத்தல் மற்றும் இணைய குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டில், அந்த செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அமெரிக்க அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழக்கறிஞருமான ரொபர்ட் கென்னடி ஜூனியர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “துரோவ் கைது செய்யப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது. சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எக்ஸ் சமூக வலைதள உரிமையாளரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மீம்ஸ் போட்டவர்களை ஐரோப்பிய சிறையில் அடைக்கிறார்கள். பிரான்சில் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரியை கைது செய்கிறார்கள்.

‘மீம்ஸ்’களை தடை செய்ய அயர்லாந்து முயற்சிக்கிறது. எக்ஸ் சமூகவலைதள நிறுவனத்தை பிரேசில் நாட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். எக்ஸ் வலைதள பதிவுகளை அவுஸ்திரேலியா தணிக்கை செய்ய முயற்சிக்கிறது. வரும் 2030இல் ஐரோப்பாவில் மீம்ஸ் போடுபவர்களை தூக்கிலிடும் சூழல் கூட உருவாகலாம். இது ஆபத்தான காலங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ரம்பள் (Rumble CEO) தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் பாவ்லோவ்ஸ், “டெலிகிராமில் பதிவுகளை அழித்ததற்காக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவைக் கைது செய்வதன் மூலம், சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கைதான துரோவை விடுவிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.